/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/koda_0.jpg)
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் கனகராஜின் மரணம் தொடர்பான வழக்கில், சேலம் மாவட்ட காவல்துறையினர் மேல்விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி நள்ளிரவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் கார் ஓட்டுநரான கனகராஜ், அடுத்த ஐந்து நாள்களில், அதாவது ஏப்ரல் மாதம் 28- ஆம் தேதி சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதியதில் உயிரிழந்தார்.
இது தொடர்பான விசாரணை ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்தது. கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரது சகோதரர் தனபால் அதை மறுத்து கனகராஜ் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கனகராஜின் மரணம் தொடர்பான வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரித்து வருகின்றனர். இதற்காக சேலம் நீதிமன்றம் மூலம் முறையாக அனுமதி பெற்றுள்ளதாக, சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கோடநாடு கொலை, கொள்ளை, அதைத் தொடர்ந்து அரங்கேறிய நான்கு மர்ம மரணங்கள் தொடர்பாக, உதகை காவல்துறையினர் மேல் விசாரணையை நடத்தி வருகின்றன. கனகராஜ் சகோதரர் தனபால் மனைவி, உறவினர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தியிருந்தனர். அவர்கள் அளித்த புதிய தகவல்கள் அடிப்படையில் கனகராஜ் விபத்து வழக்கை காவல்துறை மீண்டும் விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)