Skip to main content

கீழ்ப்பாக்கம் மனநலக்காப்பகத்தில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை!- உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

kilpakkam chennai high court order coronavirus samples tested

 

கீழ்ப்பாக்கம் மனநலக்காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 800 பேருக்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும், ஒரு வாரத்தில் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலக்காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில், 26 பேருக்கும், மருத்துவர்களுக்கும், இயக்குனருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தனர்.

 

இந்தச் சூழ்நிலையில், மனநலக்காப்பகத்தில் உள்ள 20 வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 800 பேருக்கும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அனைத்துவித மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், அதன் மாநிலச் செயலாளர் நம்புராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில், மனநலக்காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தனிமனித விலகல், கை கழுவுவது உள்ளிட்ட விஷயங்களை எடுத்துச் சொல்ல முடியாது என்பதால், அவர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பதற்கான அபாயம் அதிகம் உள்ளது. நோய்த்தொற்றின் அறிகுறிகள் பற்றி அவர்களால் எடுத்துக் கூற இயலாது. கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களுடன், கரோனா பரிசோதனை செய்யப்படாதவர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.  தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலோ, புதிதாக கிங் இன்ஸ்டிடியூட்டில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையிலோ அனுமதிக்க வேண்டும். மேலும், அறிகுறி இல்லாமல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, கீழ்ப்பாக்கம் மனநலக்காப்பகத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனநலக்காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்து வருவதாகவும், எவ்விதப் பாகுபாடும் காட்டப்படவில்லை எனவும், தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞர் முத்துகுமார் தெரிவித்தார். ஆனால், மனநலக்காப்பகத்தில் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்குச் சிறப்புக் கவனம் வழங்க வேண்டியது அவசியம் என்பதையும், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களால்தான் அவர்களை நன்றாகக் கவனிக்க முடியும் எனவும், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்தினார்.

 

மனுதாரர் தரப்பு விளக்கத்தை மறுப்பதற்கில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் மதிப்பது போலத்தான் அவர்களையும் நினைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, மனநலக்காப்பகத்தில் சிகிச்சையில் உள்ள 800 பேருக்கு மட்டுமல்லாமல், மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டன்கள், சமையல்காரர்கள் என அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர். 

 

http://onelink.to/nknapp

 

ஒரு வாரத்தில் இந்தப் பரிசோதனைகளை முடிக்க வேண்டுமெனவும், அதில் கிடைக்கும் முடிவுகளைப் பொறுத்து, எந்த மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதை அரசு முடிவெடுக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்