Skip to main content

மருந்தும் இல்லை, மருத்துவரும் இல்லை… பாம்பு கடிக்கு பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

kid died due to snake bite

 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள வளையமாதேவி ஊரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் 4 வயது சிறுவன் கவின். நேற்று சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்கள் வீட்டருகே ஒரு புற்றிலிருந்து வெளியே வந்த பாம்பு சிறுவனைக் கடித்துள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பெற்றோரிடம், தன்னை பாம்பு கடித்து விட்டதாகக் கூறியுள்ளான் கவின்.

 

இதையடுத்து அவர்கள், மகனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அவசரமாக புறப்பட்டனர். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் வாகனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவரிடம் பைக்கை இரவல் வாங்கிக்கொண்டு அவர்கள் ஊரான வளையமாதேவியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரமுள்ள சேத்தியாதோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த செவிலியர்கள் சிறுவனின் நாடித் துடிப்பைப் பார்த்துவிட்டு, நாடித்துடிப்பு குறைந்து வருகிறது என்று கூறியுள்ளனர். ஆனால், அங்கு பாம்பு கடிக்கான மருந்துகள் இல்லாததாலும் அங்கிருந்து சிதம்பரம், கடலூர் போன்ற ஊர்களுக்குச் செல்வதற்கு போதிய வாகன வசதி இல்லாததாலும் பெரிதும் சிரமப்பட்டனர்.

 

இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து ஒரு மணி நேரம் கழித்தே ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அந்த ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு சிறுவனின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு பகுதியில் வாழும் மக்கள், அரசு சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்களோ மருந்து மாத்திரைகளோ இல்லாத காரணத்தால்தான் சிறுவன் உயிரிழந்துள்ளதாகக் கூறினர். மேலும், ஊரடங்கு காலத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் அவசர உதவிக்கு வந்து சேரவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

சுகாதார நிலையங்களில் விஷக்கடிக்கு முறிவு ஏற்படுத்தும் மருந்துகள் அவசியம் இருப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல், போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை அரசும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள கிராம மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

11 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Tragedy of 11-year-old girl; Police serious investigation

மதுரை மாவட்டம் கூடல் புதூர் என்ற பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (21.03.2024) அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிறுமியின் வீட்டிற்கு வந்த தடயவியல் ஆய்வாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு  தற்போது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றி விசாரணையை மதுரை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.