
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' வலைத் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ''அனைவருக்கும் வணக்கம் 'ஃபேர் டிலிமிட்டேசன்' தான் இப்பொழுது பேசிக் பொருளாக இருக்கிறது. திமுக ஏன் இதை பேசுபொருளாக்கியது என்றால் 2026 கண்டிப்பாக டிலிமிட்டேசன் கண்டிப்பா நடந்தே ஆகணும் . அப்பொழுது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நம்முடைய எம்பிக்கள் உடைய பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும். இதை உணர்ந்துதான் நாம் முதலில் குரல் எழுப்பி இருக்கிறோம். இது எம்பிக்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டும் கிடையாது. நம் மாநிலத்தினுடைய உரிமைச் சார்ந்த பிரச்சனை. அதனால்தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி இருக்கிறோம்.
பாஜக தவிர மற்ற எல்லா கட்சிகளும் ஓரணியில் நின்று நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டுமென ஒரு தீர்மானத்தை வைத்து, இந்த தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படக்கூடிய மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என முடிவெடுத்தோம். அதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநில முதலமைச்சர்களுக்கும், நாடாளுமன்றத்தில் பரதிநிதித்துவம் இருக்கக்கூடிய அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த எல்லா கட்சியினுடைய தலைமைக்கு நான் கடிதம் எழுதி இருந்தேன்.
அந்த கடிதங்களை ஒரு அமைச்சர் ஒரு எம்பி அடங்கிய குழு அவர்களின் நேரில் சந்தித்து கொடுத்து விளக்கம் அளித்தார்கள். எல்லா மாநில முதலமைச்சர்கிட்டயும் நானே போனில் பேசினேன். இதைத் தொடர்ந்து சிலர் நேரடியாக வருவதாகவும் சிலர் ஏற்கனவே வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்ல ஒப்புக் கொண்டதால் தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்புவதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இந்த முதல் கூட்டம் மார்ச் 22 சென்னையில் நடக்க இருக்கிறது. இப்பொழுது எதற்கு இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் என சிலர் கேட்கிறார்கள். தொகுதி மறு சீரமைப்பால் நம் தமிழ்நாடு, நாம் அழைத்திருக்கும் மாநிலங்களும் பாதிப்பு ஏற்பட்டால் இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்திற்கான மதிப்பு இருக்காது. நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல் நசுக்கப்படும். நம்முடைய உரிமைகளின் நிலை நாட்ட முடியாது. இது இந்த மாநிலங்களை அவமதிக்கும் செயல். எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டினுடைய வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுக்கக் கூடாது. அதனால் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பெரும்பாலான கட்சிகளுடன் ஒருங்கிணைந்த சிந்தனைப்படி மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கிற இந்த கூட்டம் நடைபெறப்போகிறது. இந்த கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றி அடையும். நம்முடைய இந்த முன்னெடுப்பு இந்தியாவை காக்கும். நன்றி' என்றார்.