Skip to main content

“புதிய அணையைக் கட்ட கேரள அரசு முயற்சி...” - செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Kerala govt attempt to build a new dam Selvaperunthakai strongly condemned

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை சுமார் 128 ஆண்டுகள் பழமையானது ஆகும். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு கேரள அரசு முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே 336 மீட்டரில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இத்தகைய நிலையில் மீண்டும் புதிய தடுப்பணை கட்ட கேரள அரசு முடிவு செய்தது. அதற்காகச் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்தது. அதில், “தற்போது உள்ள அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆனதால் பாதுகாப்பு கருதி புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அணை கட்டிய பின்னர் தமிழகத்திற்கு தற்போது வழங்குவதைவிட அதிக தண்ணீரை வழங்க முடியும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த விண்ணப்பம் தொடர்பாக வரும் 28 ஆம் தேதி மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய அணை வண்டிப்பெரியாரிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் முல்லைப் பெரியாரில் புதிய அணை, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Kerala govt attempt to build a new dam Selvaperunthakai strongly condemned

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டவும் , பழைய அணையை இடிக்கவும் ஒன்றிய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியிருப்பதாக வந்திருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை ஆய்வு செய்து தயார் செய்யக் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் வரும் 28 ஆம் தேதி மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காகப் பட்டியலிடப்பட்டிருப்பதாக வந்திருக்கிற செய்தி தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. கேரள அரசின் இத்தகைய முயற்சிகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கடந்த 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு, அணை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது. இதையொட்டி 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், தமிழகத்திற்குப் பயன்படுகிற வகையில் நீர்மட்டத்தை 142 அடியாக உறுதி செய்து அனுமதி அளித்தது. அதே நேரத்தில், கேரள அரசு இயற்றிய சட்டத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடிவரை நீரைத் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதற்கு பிறகும் புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் கருத வேண்டியிருக்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு காண வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினாலும், கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் அணையைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து குந்தகம் விளைவித்து வருகிறது. 

Kerala govt attempt to build a new dam Selvaperunthakai strongly condemned

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுவால் உறுதி செய்யப்பட்ட பிறகு, கேரள அரசு இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அதையும் மீறி தமிழ்நாட்டு விவசாயிகளைப் பாதிக்கும் செயல்களில் கேரள அரசு ஈடுபடுமேயானால், உடனடியாக இதைத் தடுத்து நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுகின்ற நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்