தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. அங்கு பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து கேரளாவின் கோழிக்கோடு, இடுக்கி, மூணாறு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தின் அரிபாடு பகுதியைச் சேர்ந்த குஞ்சுமோன் என்பவர் அங்கு வாத்துப் பண்ணை வைத்துள்ளார். அங்கு இன்குபேட்டர் மூலம் குஞ்சு பொறிக்கப்பட்டு கேரளா மற்றும் தமிழகப் பகுதிகளில் குஞ்சு ஒன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் கேரளாவில் தொடர் மழை காரணமாக, அவரது ஏரியாவில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாத்துக் குஞ்சுகளைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்படவே, தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகேயுள்ள கோவிந்தப் பேரி கிராமத்திற்கு வந்தவர் அங்கு பண்ணை அமைத்து வாத்துக் குஞ்சுகளைப் பராமரித்து வருகிறார். இந்த வாத்துக் குஞ்சுகள் அருகிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு சாலையின் ஓரமாக மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போன்று வரிசையாக மந்தகாசமாக நடைபோடுவது காண்போரை வியக்க வைக்கிறது.
கேரளாவில் தற்போது மழைகாலம் தொடங்கிவிட்டது. வாத்துக்களை வெள்ளநீர் அடித்துச் சென்று விடுவதால் அங்கு பராமரிக்க முடியாமல் இங்கே கொண்டு வந்த பராமரித்து வருவதோடு பிறபகுதிகளுக்கும் விற்பனை செய்து வருகிறோம் என்கிறார் உரிமையாளரான குஞ்சுமோன்.
இந்த 6 ஆயிரம் வாத்துக் குஞ்சுகளும் உரிமையாளர் அசைக்கிற பிரம்புக்கு கட்டுப்பட்டு சிதறாமல் சீராக நடைபோட்டுச் செல்வது புருவங்களை உயரவைக்கிறது.