Skip to main content

''பள்ளியால் நான் பெருமையடைகிறேன்; என்னால் பள்ளி பெருமையடைகிறது'' - வாசகத்தை மெய்ப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள்!! 

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

keeramangalam govt school

 

'கஜா' புயல் சேதத்தால், குடிசை வீட்டின் மேல் போடப்பட்ட தார்ப்பாய்களைக் கூட இன்னும் மாற்ற முடியாத வறுமையில், ஒற்றை விளக்கு வெளிச்சத்தில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளனர் ஒரே ஊரைச் சேர்ந்த மாணவ மாணவிகள். ஒரே ஊரில், ஒரே வகுப்பில் படித்த 3 மாணவ, மாணவிகள், ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளதால் அந்த கிராமமே மகிழ்ச்சியில் உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் தொடர்ந்து பல வருடமாகச் சாதித்து வருகின்றனர். செரியலூர் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பை பல ஊர்களில் உள்ள பள்ளிகளில் படித்து, அரசு பொதுத் தேர்வுகளிலும் திறனாய்வுத் தேர்வுகளிலும் சாதித்து வருகின்றனர்.

 

keeramangalam govt school


அதேபோல, செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரே வகுப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்து, தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற திவ்யா, தரணிகா, ஹரிகரன் ஆகிய 3 மாணவ மாணவிகளும், தொடர்ந்து கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து 'நீட்' தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்றனர். மேலும், தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் மூலம், மருத்துவக் கலந்தாய்வில், திவ்யா மதுரை அரசு மருத்துவக் கல்லூரியையும், தரணிகா தஞ்சை மருத்துவக் கல்லூரியையும், ஹரிகரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்து இன்று கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

ஒரு கிராமத்துப் பள்ளியில் ஒரே வகுப்பில் தொடக்கக் கல்வியைத் தொடங்கிய 3 மாணவ, மாணவிகளும் தொடர்ந்து ஒவ்வொரு தேர்விலும் சாதித்து வந்ததுடன், தற்போது மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ளது அந்த கிராம மக்களையும் பெற்றோர்களையும் மகிழச் செய்துள்ளது. மிகுந்த சந்தோஷத்துடன் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.

 

keeramangalam govt school


இது குறித்து மாணவர்கள் கூறும் போது, செரியலூர் நடுநிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் சேர்ந்து திறனாய்வுத் தேர்விலும் நீட் தேர்விலும் 3 பேர் தேர்வாகி, மருத்துவராகும் கனவு நிறைவேறுகிறதை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். இந்த 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு, கிராமப்புற மாணவர்களும் மருத்துவராகலாம் என்பதைக் காட்டியுள்ளது என்றனர்.


பள்ளி ஆசிரியர் அன்பரசன் கூறும் போது, எங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி கொடுக்கிறோம். அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவிக்கான திறனாய்வுத் தேர்வுகளில், பலர் தேர்வாகி உள்ளனர். அதன்படியே தற்போது ஒரே வகுப்பில் படித்த 3 மாணவ மாணவிகள் மருத்துவம் படிக்கத் தேர்வாகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாணவர்கள் குடும்பங்கள் அனைவருமே வறுமையில் உள்ளவர்கள் தான். அவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவி தேவைப்படும் போது உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார். 

 

cnc

 

அதேபோல, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 4 மாணவிகள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஒரு மாணவர் என ஒரே ஊரில் இருந்து 5 மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்க காரணமாக இருந்துள்ளது, இந்த அரசுப் பள்ளிகள். இன்று காலை மாணவ, மாணவிகளைப் பள்ளிக்கு அழைத்த தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜன் மற்றும் மாரிமுத்து ஆகியோரும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் மாணவர்களை வாழ்த்தி இனிப்பு வழங்கி, மருத்துவக் கல்லூரிகளுக்கு வழியனுப்பி வைத்தனர்.

 

keeramangalam govt school


 

அந்தப் பள்ளியில் உள்ள ஒரு வாசகம் நம் கண்ணில்பட்டது, 

 

"இது என் பள்ளி.. பள்ளியால் நான் பெருமையடைகிறேன். என்னால் பள்ளி பெருமையடைகிறது'' 

 

இந்த வாசகத்தை மெய்ப்பித்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

 81 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் சிவன்! களைகட்டும் மகா சிவராத்திரி!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

தமிழ்நாட்டில் உயரமாக முழு உருவத்தில் எழுந்து நின்று தோற்றமளிக்கும் சிவன் சிலை புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலத்தில் உள்ளது. 81 அடி உயரத்தில் சிவனும் ஏழேகால் அடி உயரத்தில் தலைமைப் புலவர் நக்கீரரும் சிலையாக நிற்கும் கீரமங்கலம் நோக்கி மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்களின் வருகை தொடங்கியுள்ளது.

கீரமங்கலத்தின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் ஆலயம் உள்ளது. 800 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் முன்பு உள்ள தடாகத்தில் 81 அடி உயரத்தில் பிரமாண்ட முழுஉருவ சிவன் சிலையும், சிவனிடம் உண்மைக்காக தர்க்கம் செய்த இடமாக கருதப்பட்டதால் தலைமைப் புலவர் நக்கீரருக்கு ஏழேகால் அடியில் கல்சிலையும் அமைத்து பழமையான கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து 800 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ல் சிலைகள் திறப்பு மற்றும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதை லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

குடமுழுக்கு செய்யப்பட்ட பிறகு உயரமான சிவனைப் பார்க்க தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வரும் சிவ பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே போல மகாசிவராத்திரி நாளில் மகா சிவனைக் காண தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தில் கிரிவலம் சென்று, இரவு தங்கி இருந்து அதிகாலை செல்கின்றனர். இந்த வருடமும் அதிக பக்தர்கள் கூட்டம் வரலாம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.