Skip to main content

"புயல் நிவாரணத்திற்காக தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்" -கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

k.balakrishnan press meet at cuddalore district

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது:- "2000- ஆம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டத்தில் 9 முறை புயல், பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது அமைச்சர்கள் பார்வையிடுவதும், நிவாரண உதவி வழங்குவதுமாக மட்டுமே இருக்கிறது. எனவே, தொலைநோக்கு பார்வையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும். பெய்யும் மழையை சேமிக்க கொள்ளிடத்தில் 7 கதவணைகள் அமைக்க வலியுறுத்தப்பட்ட நிலையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ஆதனூர்- குமாரமங்கலம் இடையே ஒரு கதவணை அமைக்க நடவடிக்கை எடுத்தார். மற்ற கதவணைகளையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

1.65 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 0.852 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் தேக்க முடிகிறது. எனவே, வீராணம் உள்பட எல்லா ஏரிகளையும் தூர்வார வேண்டும். மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நெல் பயிரை பார்ப்பதற்கு பச்சை பசேலென தெரிந்தாலும் விளைந்தால் அவை பதராகத் தான் இருக்கும். எனவே, நெல்லுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரமும், வாழைக்கு ரூபாய் 50 ஆயிரமும், ஒவ்வொரு பயிருக்கும் உரிய இழப்பீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும்.

 

வறட்சி, புயல் பாதிப்புகளுக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரும் நிதியில் 10 சதவீதம் மட்டுமே வழங்குகிறது. பின்னர் எதற்காக மத்தியக் குழுவினை அரசு அனுப்பி வைக்க வேண்டும். எனவே, புயல், மழை பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தாலே தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். வீடு இடிந்தால் மட்டும் நிவாரணம் என்று சொல்லக் கூடாது.

 

சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவசாயிகளை பாதிக்கும். இதேபோன்று சென்னை- திருவள்ளூர்- பெங்களூர் சாலைக்காக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இரு திட்டங்களையும் அரசு கைவிட வேண்டும். விவசாயத்தை அழித்து விட்டு வளர்ச்சி தேவைப்படுகிறதா? ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைத்து விட்டு பெரிய அளவிலான நாடாளுமன்ற கட்டிடம் தேவையா? வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு கூறி விட்டதால் இப்போராட்டம் நீடித்துக் கொண்டே செல்லலாம்.

 

அதேநேரத்தில் இதேப் போன்ற சட்டத்தை தமிழகத்திலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளனர். மத்திய அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற்றாலும் தமிழகத்தில் இச்சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலை உள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளின் நலனை அ.தி.மு.க கண்டுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமென்ன? ஜாதி வாரியான புள்ளி விபரங்கள் வேண்டுமெனில் மத்திய அரசு 2011- ஆம் ஆண்டு எடுத்த புள்ளி விபரங்களை கோரி பெற்றுக் கொள்ளலாமே" என்றார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், நிர்வாகிகள் மு.மருதவாணன், பி.கருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மாநில அரசு மீது அவதூறு பேசும் நேரமா இது?” - கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
 K. Balakrishnan Condemned to finance minister nirmala sitharaman

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணம் கோரியிருந்தது. அதே சமயம் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஒருவர், “கேட்கும் போதெல்லாம் கொடுக்க நாங்கள் என்ன ஏடிஎம்மா?” எனக் கேட்டிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தொடர்பாகப் பேசியது சர்ச்சையானது. 

இந்த சூழலில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத்தானே செய்கிறோம். அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதைப் பொதுவாகவே சொல்கிறேன். அவர் மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசியிருந்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (23-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய அரசும், மத்திய நிதியமைச்சரும் நடந்து கொள்கின்றனர். தமிழ்நாடு அரசைப் பற்றி முழுக்க முழுக்க அவதூறு பரப்பும் பணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டுள்ளார். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசக்கூடாது. மாநில அரசு மீது அவதூறு பேசும் நேரமா இது?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு எந்த மத்திய அமைச்சர் வந்தார்கள்? இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டபோதும் ஒரு ரூபாய் கூட கூடுதல் நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. நிவாரணப் பொருட்களுக்காகவும், மீட்புப் பணிக்காகவும், தமிழக முதல்வர் ரூ.21,000 கோடி கேட்டார். ஆனால், அதற்கு மத்திய அரசு ரூ.21 கூட தரவில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஏன் தேசியப் பேரிடராக அறிவிக்கக் கூடாது? தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2,000 கோடியை நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்க வேண்டும். தமிழக மக்களுக்குத் தர வேண்டிய நிதியை கொடுத்துவிட்டு அரசியல் செய்யுங்கள்” என்று கூறினார். 

Next Story

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Judgment after approximately 5 years; A twist in the case of AIADMK leader Panchanathan

 

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் மற்றும் அதிமுக நிர்வாகியான பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடலூரில் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

 

இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட நபர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதன்படி, கந்தன், ஆறுமுகம், சரண்ராஜ், சுரேந்தர், ஓசைமணி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.