Skip to main content

கருவேல மரத்திற்கும் காப்பீடு..! கல்லா கட்டிய அதிகாரிகள்..!!!!

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
Karuvela timber Insurance




பயிர் சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன், பயிரே சாகுபடி செய்யாமல் அதிகாரிகள் துணையுடன் கருவேல மரத்திற்கும் இழப்பீட்டுத்தொகையைப் பெற்றுள்ளனர் விவசாயிகள். இவ்விவகாரம் மாவட்ட ஆட்சியர் வரைக்கும் செல்ல கிடுகிடுத்துள்ளது மாவட்ட வருவாய் வட்டாரம்.

 

     தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் பயிர் சாகுபடி செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.120 கோடி ரூபாய் வரை இழப்பீட்டுத் தொகை வழங்கியதாக அரசாங்கம் புள்ளி விவரம் சொல்கிறது. விவசாயிகள் பயிர் காப்பீட்டு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.345, சோளம்- ரூ.123, கம்பு -ரூ.105, மக்காச் சோளம் - ரூ.200-ம் பாசிபயறு-ரூ.195, உளுந்து -ரூ.195-ம், சூரிய காந்தி-ரூ.132-ம், பருத்தி -ரூ.715 மிளகாய் - ரூ.915-ம், கரும்பு -ரூ.653-ம், எள் - ரூ.86 நிலக்கடலை- ரூ.218-ம், வெங்காயம் ரூ.819, வாழை ரூ.2,520 காப்பீட்டு பிரீமியமாக செலுத்துதல் வேண்டும்.

 

     இந்நிலையில், விவசாயம் பொய்த்துப் போக, மக்காச்சோளம் சாகுபடி செய்து, பாதிக்கப்பட்டதாக 18,714 விவசாயிகளுக்கு ரூ.63.47 கோடி இன்ஸ்யூரன்ஸ் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் மிளகாய் சாகுபடி செய்து பாதிக்கப்பட்டதாக 8 ஆயிரத்து 494 விவசாயிகளுக்கு ரூ.32.60 கோடி காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. பாசிபயறு சாகுபடிக்கு ரூ.20.73 கோடியும், நெல் பயிருக்கு ரூ.3.92 கோடியும் இதர பயிர்களான உளுந்து, எள், வெங்காயம் போன்ற பயிர்களுக்கும் என மொத்தம் ரூ.120 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் பாதிக்கும் மேல் உள்ள பயனாளிகள் விவசாயமே, செய்யாமல் அதிகாரிகள் துணையோடு காப்பீட்டுத் தொகையை பெற்றுள்ளனர். சும்மா வருகிற பணத்தை ஏன் விடவேண்டும் என அதிகாரிகளின் முறைகேட்டுக்கு விவசாயிகளும் கூட்டு சேர்ந்துள்ளனர்.

 

     விளாத்திகுளம் வட்டம் ஆற்றாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரத்தில், “பயிர் சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை விட, காட்டை மராமத்து செய்யாமல் கருவேலம் மரமாக போட்டு வைத்திருந்தவர்கள் தான் பயிர் காப்பீடு பட்டியலில் அதிகம் இடம் பெற்றுள்ளனர். இந்த மோசடிக்கு உள்ளூர் விஏஓ, தலையாரி எல்லாமே உடந்தையாக இருக்கிறார்கள்” என்று குமுறினார் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமர்.

 

    இதேபோல், ஒட்டப்பிடாரம் வட்டம் புளியம்பட்டி குறுவட்டத்தில உள்ள அக்காநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டுடன்பட்டி கிராமத்தில் லீலா (த-பெ) மாரிமுத்து என்பவர் 3 ஏக்கர் நிலத்தில் உளுந்து சாகுபடி செய்து பாதிக்கப்பட்டதாக காப்பீட்டு தொகைக்கு சிபாரிசு செய்திருக்கிறார் கிராம நிர்வாக அலுவலர் செல்வி.  இதுதொடர்பாக அரசல் புரசலா செய்தி வெளியே கசிந்த உடன், வருவாய் ஆய்வாளர் அன்னதாஸ் ஆய்வு செய்திருக்கிறார். அதற்கு முன்னதாகவே அந்த நிலத்தில் இருந்த வேலிக் கருவேல மரங்களை ஜேசிபி மூலம் அகற்றி தடயத்தை மறைத்திருக்கின்றனர்.  இதேபோல், எட்டையபுரம், புதூர், கயத்தார், கோவில்பட்டி என பல பகுதிகளிலும் நிலத்தை தரிசாக போட்டிருந்த விவசாயிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, அதிகாரிகள் லட்சக் கணக்கில் காசு பார்த்துள்ளனர்.   மக்காளச் சோளத்தில் காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ஏரியாவை பொறுத்து ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதனால், கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் ஏராளமானோர் மக்காச் சோளமே விதைத்துள்ளனர். உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களுக்கு ரூ.6000 முதல் ரூ.9,000 வரை வழங்கப்படுகிறது. மழை பெய்து பயிர் வளர்ந்தால், மகசூல் அல்லது காப்பீட்டு தொகை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருக்கின்றனர்.

 

   இந்த காப்பீடு பற்றி விபரம் தெரிந்த ஒரு சிலர், "சாகுபடி செய்யாமல் கிடக்கும் பிறரது விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து, அதில் உழவு போட்டு மானாவாரி பயிர்களை விதைத்துள்ளனர். காப்பீட்டு பிரீமியம் தொகை குறைவுதான். அதனால், விதைத்து வைப்போம் என்ற எப்படியும் போட்ட முதலை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு..!” விவகாரம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி காதிற்கு எட்ட, வருவாய் துறை அதிகாரிகள் மத்தியில் பதட்டம் நிலவி வருகின்றது.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இன்சூரன்ஸ் பணத்திற்காகக் கொலை செய்த சம்பவம்; குழப்பத்தை ஏற்படுத்திய மற்றொரு புதிர்!

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
 Another Riddle  on Incident of insurance money at ennore

இன்சூரன்ஸ் பணத்திற்காக  நண்பனை கொலை செய்த விவகாரத்தில், இறந்தது டில்லிபாபு என முடிவு செய்திருந்த நிலையில், மேலும் புதிராக அந்த உடல் ஆணே இல்லை பெண் என டி.என்.ஏ பரிசோதனையில் வெளிவந்து மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பரை கொலை செய்துவிட்டு, நாடகமாடிய சுரேஷ் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி குடிசை வீடு எரிந்ததில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக, சுரேஷின் உடலை காவல்துறை உடற் கூறாய்வு முடித்து அவரது வீட்டில் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்துள்ளனர். அதே செப்டம்பர் மாதத்தில் இருந்து டில்லிபாபு கானவில்லை என டில்லிபாபு தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து எண்ணூர் போலீசாரை அலைகழித்துள்ளனர். அதன் பிறகு சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தப் பிறகு, நீதிமன்ற உத்தரவின் பெயரில் மீண்டும் எண்ணூர் போலீசார் விசாரணை மேற்க்கொண்டன்ர். அந்த விசாரணையில், இறந்தவர் சுரேஷ் இல்லை, டில்லிபாபு எனத் தெறியவந்தது. மேலும், தான் வாங்கிய 1 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக நாடகமாடி தன்னுடைய நண்பனே கொலை செய்து எரித்தாக அவர்களே ஒப்புக்கொண்டதின் பெயரிலே இந்த வழக்கு முடிவுக்கு வந்ததுள்ளது.

இல்லை என்றால் இந்த வழக்கு ஒரு தற்கொலை வழக்காவே போலீசாரால் முடித்துவைக்கப்பட்டு இருக்கும். மேலும்  இப்படி தற்கொலை வழக்காவே முடித்து வைப்பதற்காகவே ஒரத்தி போலீசார் செயல்பட்டு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளது. மேலும் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படும் டில்லி பாபுவின் பிரேதம் தானா என்கிற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.  இறந்துபோனதாக சொல்லப்படும் சுரேஷ் பிரேதத்தின் மீது விசாரணை செய்த ஒரத்தி போலீசாரும், பிரேதப் பரிசோதனை செய்த செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும், இறந்துபோன சடலம் சுரேஷ் என்பவருடையதுதான் என்பதை உறுதி அளித்து அன்றே சான்று வழங்கியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில்தான், சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் டி.என்.ஏ சோதனையின் மூலமாக இறந்தவர் ஆண் இல்லை, பெண் என டி.என்.ஏ அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் மேலும் சர்ச்சையைக் கிளப்பியுஎ்ளது. உண்மையில் இறந்து போனது யார்? அது யாருடையை உடல்? எதற்காக இப்படி நாடகம் ஆடினார்கள்?  எனக் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனை ஐனவரி 31 ஆம் தேதி வந்த நக்கீரனில் இன்சூரன்ஸ் கொலை? போலீஸ் - மருத்துவர் கூட்டுச்சதி? எனத் தெளிவாக வெளியிட்டிருந்தோம். தற்போது அது வெட்ட வெளிச்சாமாகி உள்ளது. அப்படி என்றால் டில்லிபாபு எங்கே உள்ளார்? இந்தப் பெண் உடல் யார்? எதற்காக குற்றவாளிக்கு காவல்துறையும், மருத்துவரும் துணை போனார்கள்? என்ற கேள்விகளுக்கு பதில் குற்றவாளி வாய் திறந்தாலே உண்மை வெளிச்சத்திற்கு வரும் .

Next Story

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு; வாகனங்களைப் பழுது பார்க்க உதவி எண்கள் அறிவிப்பு

Published on 10/12/2023 | Edited on 11/12/2023
'Miqjam' storm damage; Notification of helpline numbers for repairing vehicles

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதால், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களைப் பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் 1800 2100 007 என்ற எண்ணிற்கும், யமாஹா வாடிக்கையாளர்கள் 1800 4201 600 என்ற எண்ணிற்கும், டிவிஎஸ் வாடிக்கையாளர்கள் 1800 2587 555, ஹோண்டா வாடிக்கையாளர்கள் 1800 1033 434 என்ற எண்ணிற்கும், சுசூகி வாடிக்கையாளர்கள் 1800 1217 996 என்ற எண்ணிற்கும், மாருதி சுசூகி வாடிக்கையளர்கள் 1800 1800 180 என்ற எண்ணிற்கும், லாண்சன் டொயோடா வாடிக்கையளர்கள் 1800 1020 909 மற்றும் 1800 2090 909 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கியா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள் 1800 1085 000 என்ற எண்ணிற்கும், ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் 1800 1024 645 என்ற எண்ணிற்கும், டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள் 1800 209 8282 என்ற எண்ணிற்கும், டொயொட்டா வாடிக்கையாளர்கள் 1800 102 50001 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'Miqjam' storm damage; Notification of helpline numbers for repairing vehicles

இது மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், டிவிஎஸ், மாருதி, ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்பு முகாம்களை நடத்த உள்ளன. சில நிறுவனங்கள் வாகன பழுதுபார்ப்புக்கு நடமாடும் சிறப்பு குழுக்களையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வாகன பாதிப்பு மதிப்பு 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் இழப்பீடு தர காப்பீட்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் புகைப்படங்கள், பழுது நீக்கம் செய்ததற்கான ரசீதுகள் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனங்கள்  காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.