Skip to main content

கரூரில் ஆணவப் படுகொலை... பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது!!!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

KARUR INCIDENT POLICE INVESTIGATION

 

'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியாரின் வரிகள், தொடர்ந்து இந்த சமூகத்தில் நடைபெறும் சாதி ரீதியான ஆணவப் படுகொலைகள் மூலம் பொய்யாகிக் கொண்டே இருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கரூரில் ஒரு ஆணவக் கொலை அரங்கேறியுள்ளது.

 

கரூர் மாவட்டம் காமராஜர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் ஹரிஹரன் (வயது 23). ஹரிஹரன் இதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் கடை வைத்திருக்கும் நேர் எதிர் தெருப் பகுதியில் வசித்து வருபவர் வேலன். இவர் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். 

 

அவர், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கில பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தெருவில் எதிர் கடை என்பதால் ஹரிஹரனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டிலும் தெரிய வர பிரச்சனை ஆகியுள்ளது.

 

இந்த விரோதம் கொலை செய்யும் அளவிற்கு வளர்ந்து ஹரிஹரனை நேற்று முன்தினம் (07/01/2021) மதியம் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு அந்த பெண் மூலம் பேசி வரவழைத்த பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் 10- க்கும் மேற்பட்டோர், ஹரிஹரனைக் கல்லால் அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரன் உயிருக்குப் போராடிய நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஹரிஹரன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 

காதலித்த இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தப் படுகொலை திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாகத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை அடிப்படையில் பெண்ணின் சித்தப்பா சங்கர் (50), தாய்மாமன்கள் கார்த்திகேயன் (40), வெள்ளைச்சாமி (38) உள்ளிட்ட மூவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண்ணின் தந்தை வேலன், மற்றொரு சித்தப்பா முத்து உள்ளிட்டவர்களைக் காவல்துறையினர்  தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

"இந்த ஆணவக் கொலையை, ஹரிஹரனின் நன்நடத்தை  சரியில்லை என்று சாதாரணமாக முடிக்கப் பார்க்கிறார்கள்" என்று ஹரிஹரனின் தரப்பில் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.