Kanimozhi expressed grief over the passed away of 5 people in Marina

இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று(06.10.2024) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன. இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மொத்தமாக 15 லட்சம் பேர் விமான சாகசங்களைக் கண்டு களித்தனர்.

சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சி, லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உலகத்திலேயே அதிக பார்வையாளர்களுடன் நடைபெற்ற சாகச நிகழ்ச்சி என்று உலக சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமான சாகச நிகழ்ச்சியின் போது வெயில் தாக்கம் காரணமாக 230 பேர் மயக்கமடைந்தாகவும், அதோடு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற எம்.பியுமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.