காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த மாங்காடு பகுதியில் உள்ள கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நடராஜன். தச்சர் வேலை செய்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா (வயது 48) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு தினேஷ்குமார் (வயது 23) என்ற மகனும், செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 18) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் செல்விக்கு மன வளர்ச்சி மற்றும் அந்த வயதுக்கு உரிய உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாய் சுலோச்சனா, செல்வியை உடன் இருந்து கவனித்து அவரது தேவையை பூர்த்தி செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கணவர் நடராஜன் மற்றும் அவரது மகன் தினேஷ்குமார் ஆகிய இருவரும் வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டனர். அப்போது வீட்டில் சுலோச்சனாவும் அவரது மகள் செல்வியும் இருந்துள்ளனர். அன்றைய தினம் இரவு சுலோச்சனா திடீரென தனது உடலிலும், மகள் செல்வி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது இருவரின் உடலிலும் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உட்புறமாக தாழிடப்பட்ட கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். மேலும் அவர்கள் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகள் செல்வி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி குறைந்த தனது மகளை தனக்கு பின்னால் யார் கவனித்துக் கொள்வது என்ற கவலையில் சுலோச்சனா இருந்து வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இதனால் சுலோச்சனா இந்த விபரீத முடிவெடுத்தது தெரியவந்துள்ளது. மனவளர்ச்சி குன்றிய மகளுக்குத் தீ வைத்து விட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.