ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய வேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி கல்வராயன் மலை முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை கண்டறிய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற முதல், மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அங்கிருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சப்ளை செய்வது இது தொடர்ந்து கொண்டே இருந்தது. அழிக்க அழிக்க சாராய உற்பத்தி மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் மரக்காணம் பகுதி செங்கல்பட்டு அருகே சிறு சேரி பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் கல்வராயன் மலைப் பகுதியில் முற்றிலும் கள்ளச்சாராயம் ஒழிக்கப்படும் முயற்சியில் மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உறுதியாக உள்ளார். அதன் காரணமாக காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு படைகள் அமைத்து கல்வராயன் மலை முழுவதும் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பதும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வதும் கள்ளச்சாராயத்தின் தீமைகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தலைமையில் கல்வராயன் மலை சென்ற சிறப்பு படை போலீசார் அதிநவீன ட்ரோன் கேமராவை பயன்படுத்தி கல்வராயன் மலையில் புதர்கள், நிலச்சரிவுகள், மலைச்சரிவுகள் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.
கல்வராயன்மலை கருதாங்காட்டு கிராம ஓடையில் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 6 பேரல்களில் சுமார் 1200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இந்த தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் எனவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய வேட்டையை போலீசார் தீவிரமாக நடத்தி வருகிறார்கள்.