Skip to main content

“நீதியரசர் சந்துருவின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Justice Chanduru's recommendations will be implemented soon CM Stalin

 

இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்திறன்களை மேம்படுத்தும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்ட குழு ஒன்று உருவாக்கப்படும் என்று 6.2.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, கடந்த 11.04.2023 அன்று இளைஞர் நீதி அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அரசு ஆணையிட்டது.

 

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு கடந்த 02.05.2023 முதல் பொறுப்பேற்றதுடன் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த ஏதுவாக பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டது. அதோடு மட்டுமல்லாது ஒரு நபர் குழுவானது மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.

 

அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் நீதிபதியின் ஆய்வின் அடிப்படையில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டு, இன்று (14.11.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை பொறுப்பு ஆணையர் வே. அமுதவல்லி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துருவின் மகள் சக்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டினையும் நிர்வாகத் திறனையும் மேம்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கையினைக் குழந்தைகள் நாளான இன்று பெற்றுக்கொண்டேன். சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அதிகாரிகளோடு கலந்தாய்வு செய்து, இந்த அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மதிப்பூதியம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் குழந்தைகளின் நலனுக்கான இப்பணியை ஏற்றுக்கொண்டு அறிக்கை அளித்த நீதியரசர் சந்துருவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்