/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanalkannann.jpg)
இந்து முன்னணி அமைப்பு , ‘இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம்’ என்ற ஒன்றை கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கொண்டது. அப்பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனத்திற்காக செல்கின்றனர். ஆனால் அக்கோவிலின் எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அது எப்பொழுது உடைக்கப் படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்று பேசியிருந்தார்.
பெரியார் குறித்தான அவரது இப்பேச்சு கடும் கண்டனத்திற்கு உண்டானது. இந்த விவகாரம் தொடர்பாக, தந்தை பெரியார் திராவிட இயக்கத்தினர் அளித்த புகாரில், இரு பிரிவினரிடையே கலக்கத்தை தூண்டிவிடுதல், ஒற்றுமையை சீர் குலைத்தல் போன்ற பிரிவின் கீழ் கனல் கண்ணனுக்கு எதிராக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தன் மீது போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனல் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘கோவில் வாசலில் கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களுடன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள சிலையை காவல்துறையினர் அகற்றியிருக்க வேண்டும். சிலையை வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு பதில், தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ‘கோயிலுக்கு எதிரில் ஆத்திகர்கள் குறித்து சிலை பீடத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் காரணமாகவே கனல் கண்ணன் அப்படி பேசியிருக்கிறார்’ என்று கூறி கனல் கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)