Skip to main content

அஞ்சலி, ரூபன் ஜே என்கிற கலகக்காரன்

 

 

Journalist J Rooban passed away

 

 

பத்திரிகையாளராக வாழ்வைத் தொடங்கி,  பத்திரிகை உலகில் நிறைய நண்பர்களைச் சம்பாதித்தவர் ரூபன். முகதாட்சண்யம் பார்க்காமல் எவரையும்  நேருக்கு நேர் விமர்சிக்கும் தைரியம் கொண்டவர்.  தனது அதிரடி விமர்சனங்கள் மூலம் எப்போதும் கலக்குரலையே எழுப்பிவந்தவர். வழக்கத்துக்கு மாறான திசையில் சிந்தித்தவர். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்போக்கு படைத்தவர். தீராத கலை ஆர்வமும் இலக்கிய வேட்கையும் கொண்டவர்.  அரசியலையும் இலக்கிய உலகில் நிலவும் அரசியலையும் கடுமையாக கிண்டல் செய்துவந்தவர். வாழ்வின் நிகழ்வையும் எதார்த்தத்தையும் புரிந்துகொண்டபோதும், திரையுலகில் சாதிக்கும்  ஆர்வத்தோடு சில திரைப்படங்களில் முகம் காட்டியதோடு சின்னத்திரையில் ஓரளவு செல்வாக்கோடு வலம்வந்தவர். நுரையீரல் பிரச்சினைக்காக  நாகர்கோயிலில் தங்கி சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், கரோனா தொற்றுக்கும் ஆளானார். இந்த சூழலில் திருச்சி சென்ற நிலையில், நேற்றைய நாளை (21.9.2020 தனது வாழ்வின் கடைசி நாளாக்கிக்கொண்டு, 54 வயதில் மரணத்தை தழுவியிருக்கிறார். அவரது மறைவு அவரது நட்புலகை அதிககாகவே அதிரவைத்திருக்கிறது. அவரது மறைவின் தாக்கத்தை அவரவரும் அவரவர் பாணியில் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் இருந்து.

 


கவிஞர் நேசமிகு ராஜகுமாரன்:

 

என் நண்பர்களில் ரூபன் ஒரு அதீதன். வாழ்க்கையில் எதையுமே serious ஆக எடுத்துக்கொள்ள மாட்டான். எல்லாமே விளையாட்டு. நக்கல். கேலி கிண்டல். எங்களுக்குள் நிறைய கருத்து உரசல்கள் வரும். போகும். பூனையைப் பிரிந்த சோகத்தில், நான் போட்ட ஒரு பதிவில் வந்து கிண்டல் செய்தான் என்று கோபத்தில் பேசிவிட்டேன் 15 நாட்களுக்கு முன். இப்போது துயரம். சிறந்த வாசகன். நல்ல நடிகன் ! தகவல் களஞ்சியம். எல்லோரிடமும் எப்போதும் விளையாடுபனோடு விதி விளையாடி விட்டது ! போய் வா நண்பா !

 

இயக்குநர் கவிதா பாரதி:

 

உனக்கெல்லாம் எப்படி மச்சி நான் இரங்கல் செய்தி எழுதுவேன்.. நீ எங்கேயோ‌ தூரத்துல எதோ ஒரு ஊர்ல இருக்கேன்னு நெனைச்சுக்கறேன் எப்பவும் போல இதுக்கும் நக்கலா ஒரு பின்னூட்டம் போட்றா கருவாயா.

 

பத்திரிகையாளர் மானா.பாஸ்கரன்;


திருவாரூர்ல தெருவுக்கு பத்து பதினைஞ்சு கவிஞனுங்க புலவனுங்க இருப்பீங்க போல.. என்று கிண்டலோடுதான், சென்னை தியாகராய நகர் அன்னம்மாள் மேன்ஷனில் ரூபனோடு நட்பு தொடர்ந்தது. நிறைய பேசுவார், முரட்டுத்தனமாக அன்பை செலுத்துவார். சிரிக்காம இருக்கவே தெரியாது. என் திருமணத்துக்கு திருவாரூர் வந்திருந்தார். அவரது இழப்பு செய்தி அறிந்து வருத்தமாக இருக்கிறது. தகவல் சுரங்கம் மண்ணுக்கு போய்விட்டது. ஆழ்ந்த இரங்கல்...

 

கவிஞர் போகன் சங்கர்:

 

ரூபன் சில விஷயங்களில் திடமான நிலைப்பாடுகள் விருப்பு வெறுப்புகள் கொண்டவர்.அவர் தனது நோய்க்கு நாகர்கோவிலில் தேர்ந்துகொண்ட சிகிச்சை முறைகள் மீது எனக்கு சந்தேகங்கள் இருந்தன ஆனால் அவரிடம் அதை சொல்ல முடியவில்லை. சொல்லும் இடமோ திடமோ என்னிடம் இல்லை. அதைவிட சங்கீதாவிடம் எதிர்மறையாக ஒரு வார்த்தை கூட அவர்கள் நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக சொல்ல முடியவே இல்லை. அவர் வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் குழந்தைத்தனமான அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்.என்னுடைய அவநம்பிக்கையால் அவர்களை அசுத்தப்படுத்திவிடக்கூடாது என்று தோன்றியது.உடல் நிலை மோசமாகி திருச்சிக்கு அழைத்து செல்லும்போதுகூட மிக நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டுதான் போனார். அன்றிரவு முழுவதும் உறங்காமல் புரண்டுகொண்டிருந்தேன். ஒரு தாஸ்தாவஸ்கிய தருணம். இது மாதிரி சமயங்களில் ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?என்று எனக்குத் தெரியவில்லை. உன்னால் தீர்வையோ நம்பிக்கையையோ அளிக்க முடியாவிட்டால் மவுனமாக இருப்பதே நல்லது என்று நண்பர் சொன்னார்.புத்தர் இருந்தது போல.ஆனால் மவுனம் ஒரு பெரிய பொய் அல்லவா? என்று கேட்டேன். அவர் பேசவில்லை, பிறகு "Life has been like this. 99 percent platitudes and one percent candor"என்றார்.

 

பத்திரிகையாளர் சிம்மன்;

 

அதிர்ச்சியாகவும், மிகுந்த வேதனையாகவும் இருக்கிறது ஜே.ரூபனின் இழப்பு. எப்போதும் சிரிக்க சிரிக்க பேசுபவர், அவசரமாக விடைபெற்றுச்சென்றுவிட்டார். இதழியல் துறையில் முதன் முதலில் பணிக்கு சேர்ந்த போது அறிமுகமான நண்பர்களில் ரூபனும் ஒருவர். மறைந்துவிட்ட இன்னொரு நண்பரான மோகன் மூலம் அறிமுகமானவர் ரூபன். போலீஸ் செய்தியில் முதல் பணிக்கு சேர்ந்த போது, அவருக்கே உண்டான, நகைச்சுவையும், கேலியுமாக, துறைக்கு புதியனான என்னை ஊக்குவித்துக்கொண்டிருப்பார். அப்போதே அவருக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம். தான் படித்த விஷயங்கள், புத்தகங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வதோடு, பணியிலும் ஊக்குவிப்பார். பயிற்சி நிலையில் இருந்தவன் என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் என்னை எழுதுவதற்கு ஊக்குவிப்பார். அவர் இதழ் பொறுப்பில் இருந்த நாட்களில் இன்னும் அதிகம் ஊக்குவிப்பார். அவருடன் நடை நடையாக நடந்து பேசியிருக்கிறேன். இன்பிரிண்ட் போன்ற ஆங்கில இதழ்கள் பற்றி எல்லாம் பேசுவார். சில நேரங்களி மிகையாக பேசுவார், யாரையும் நையாண்டி செய்வார் என்றாலும், அவரது வாசிப்பும், விஷய ஞானமும் அபாரமானது. தேடித்தேடி வாசிப்பார். பெட்ரிக் போர்ஸ்யத் துவங்கி எல்லா எழுத்தாளர்களையும் விரும்பி வாசிப்பார்.

 

ரூபன் மூலம் தான், எனக்கு நண்பர் சஃபி, எழுத்தாளர் கோபி கிருஷணன் அறிமுகமானார்கள். பணி முடிந்ததும் தி.நகரில் இருந்த முன்றில் புத்தக நிலைய வளாகத்தில் நண்பர்களை சந்திப்போம். இலக்கியமயமான நாட்கள் அவை. ரூபன், அப்போதெல்லாம் ஒரு மூத்த சகோதரன் போல, வழிகாட்டியிருக்கிறார்.


அப்போது அவரிடம் நிறைய திட்டங்கள் இருந்தன. புத்தாயிரம் ஆண்டு வருவதற்கு சில ஆண்டுகள் இருந்த போது, 2000 எனும் பெயரில் ஒரு இதழ் கொண்டு வர விரும்பினார். அதே போல, கிருக்கு எனும் செம கலகல பத்திரிகை நடத்துவது பற்றி பேசிக்கொண்டிருப்பார். இந்த திட்டங்களில் எல்லாம் எனக்கும் ஒரு இடம் கொடுப்பார். ஆனால் ஏனோ இந்த திட்டங்கள் எல்லாம் பேச்சுடன் நின்றுவிட்டன. இவற்றில் கவனம் செலுத்தியிருந்தால் இதழாளனாக மிகப்பெரிய உயரம் தொட்டிருப்பார். இவை எல்லாம் 1990 களில் நிகழ்ந்தவை. எப்போதும் அவரிடம் திட்டங்கள் இருக்கும். எத்துறை பற்றியும் உற்சாகமாக பேசுவார்.


அதன் பிறகு திரைத்துறை பக்கம் சென்றார், திரைப்படத்துறையிலும் அவரது ரசனையும்., வாசிப்பும் அபாரமானவை. அதிலும் சிகரம் தொட்டிருக்க வேண்டியவர். ஏனோ அவரது உத்வேகமும், எண்ணங்களும் பெரிய அளவில் செயல்வடிவம் பெற்றதில்லை. பேஸ்புக்கில், அவரது மனைவி பற்றிய பதிவுகளில், கிண்டல், சுயகேலிக்கு மத்தியில் தனக்கும் கிடைத்த நேசமிகு வாழ்க்கைத்துணை பற்றிய நெகிழ்ச்சியை பார்க்கலாம். அதன் காரணமாகவே அவரது திடீர் இழப்பு இன்னும் வேதனையாக இருக்கிறது.


மரணத்திலும் இத்தனைஅவசரமா என யாராவது கேட்டால் அதற்கும் கேலியாக ஏதேனும் பதில் சொல்வது தான் ரூபன். அவரது தனித்தன்மை அது. இடைப்பட்ட காலத்தில் அவருடன் நெருக்கமான பழக்கம் இல்லை. இடையிடையே பார்க்கும் போது உற்சாகமாக பேசியிருக்கிறார். ஆனால் எப்போதுமே என் மனதுக்கு நெருக்கமானவர். இதழியலில் எனக்கு கைப்பிடித்து கற்றுத்தந்தவர்களில் ஒருவர். அதைவிட முக்கியமாக என்னை ஊக்குவித்த உற்ற நண்பர். போய் வாருங்கள் ரூபன். உங்களை மறக்க முடியாது. உங்கள் இல்வாழ்க்கை துணைவியை நினைத்தால் தான் நெஞ்சம் இன்னும் கணக்கிறது.

 

சின்னத்திரைக் கலைஞர் கருணா பிரசாத்:
 

பந்தா முருகன் என்கிற ரூபன்... பந்தா என்கிற அடைமொழிக்கேற்றார் போல் வாழ்நாள் முழுக்க பந்தாவாகவே, எந்நேரமும் கேலியும் கிண்டலுமாகவே வாழ்ந்தவன். ரூபனுடைய தனித்தன்மையே நொடிக்கொருதரம் சுய விமர்சனம் செய்து கொள்வது.

மேஜிக் லேண்டன் நாடகக் குழுவினரோடு நான் பணிபுரிந்த நாட்களில் எனக்கு அறிமுகமானவன். முதல்முறை பழகுபவர்களிடம் உடனடியாக மச்சி, மாமா என்று உடனடியாக உறவு கொண்டாடுபவன். அவனே சொல்வான்... மச்சி... நான் நேர்ல பேசினாலே பாதி புரியாது... இதுல வேற போன்ல பேசறேங்கறான் என்று தன்னையே கலாய்த்துக் கொள்பவன். மக்கள் தொலைக்காட்சிக்காக அருமையான அரசியல் நையாண்டி நிகழ்ச்சியான "அவருக்குப் பதில் இவர்" என்ற தொடரில் ரூபனோடு இணைந்து பணியாற்றியுள்ளேன். மௌன வாசகன். எந்நேரமும் வாசிப்பிலேயே ஆழ்ந்தவன். ரூபனை பார்ப்பவர்கள் அவனை ஒரு ஊர்நாட்டான் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அவன் ஆங்கில நாவல்களை அனாயாசமாக வாசித்து முடிப்பவன்.


தனது வாசிப்பை எந்த இடத்திலும் தம்பட்டம் அடித்துக்கொள்ளாதவன். மௌனமாக வாழ்க்கயை வாசித்துக் கொண்டிருந்தவன் நிரந்தர மௌனத்தில் ஆழ்ந்துவிட்டான்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்