
வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாகவும் கொலை செய்யப்பட்டதாகவும் போலி வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து பீகாரைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும், புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள் தமிழகத்தில் காக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. காவல்துறையும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் வதந்தி பரப்பியதாக 8 பேர் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
பீகாரை சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவர் போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் வதந்தி பரப்பி வந்த நிலையில், நேற்று திருப்பூர் தனிப்படை போலீஸார் தெலங்கானாவில் தலைமறைவாக இருந்த ரூபேஷ் குமாரை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். அதே போல், தமிழகத்தில் தாங்கள் தாக்கப்படுவதாக பொய் வீடியோ வெளியிட்ட ஜார்க்கண்ட்டை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரை சென்னையை அடுத்த மறைமலைநகர் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து மனோஜ் யாதவ் நடந்த சம்பவத்திற்கு இந்தியில் மன்னிப்பு கேட்ட வீடியோவையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.