/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nellai-cong-letter-ART-JEYAKUMAR._6.jpg)
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக 9 தனிப்படைகள் அமக்கப்பட்டு 6 வது நாளாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jeyakumar-dhanasingh-ccyv-art.jpg)
இந்நிலையில் ஜெயக்குமார் திசையன்விளையில் உள்ள கடை ஒன்றில் கடந்த 2 ஆம் தேதி டார்ச் லைட் வாங்கிச் செல்லும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனையடுத்து ஜெயக்குமார் கடைசியாக கடைக்குச் சென்று வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கி உள்ளது. டார்ச் லைட் வாங்க கடைக்கு சென்றவர் திரும்பவில்லை என புகார் அளித்த நிலையில் அவரது வீட்டிலேயே டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது டார்ச் லைட் வாங்க கடைக்குச் சென்ற ஜெயக்குமார் வீட்டிற்கு வந்த பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வள்ளியூர் டி.எஸ்.பி. தலைமையில் நேற்று விடிய விடிய அவரது வீடு மற்றும் தோட்டத்தில் பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஜெயகுமார் மகன்கள் இருவரிடமும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளான எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், தங்கபாலு ஆகியோரிடமும் விசாரணை நடத்தி இருந்தனர். இதற்கிடையில் ஜெயக்குமார் தனசிங் தனது மருமகனுக்கு கைப்பட கடந்த 27 ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்றும், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)