/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_52.jpg)
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு தமிழ்கம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்காந்தின் உடல் அஞ்சலிக்காக கோயம்பேடு அருகே உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள். ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இரங்கல் அறிக்கை வெளியிட்ட இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், “விஜயகாந்த் மரணமுற்ற செய்தி மிகுந்த துக்கத்தையும் வேதனையையும் தந்தது. தமிழகத்தில் திரைப்படத் துறையில் ஒளி மிகுந்த நட்சத்திரமாகத் திகழ்ந்து, பல கோடி ரசிகர்களின் மனத்தில் இடம் பெற்று, தனக்கென தனியொரு தமிழ் வழி வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து வந்தவர். தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் தனது செல்வாக்கையும் சொல்வாக்கையும் நிலை நிறுத்தி, தமிழகச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்து, எண்ணற்ற இதயங்களில் இடம் பிடித்திருந்தார்.
தமிழக வரலாற்றில் பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவிஜெயலலிதா, மூதறிஞர் ராஜாஜி, கர்மவீரர் காமராஜர், கண்ணியத்துக்குக்குரிய காயிதே மில்லத் என்றெல்லாம் புகழ் பெற்றுள்ளவர்கள் பட்டியலில் ‘விஜயகாந்த்’ ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று போற்றப்படுபவராக விளங்கி வந்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் நல்லுள்ளம் கொண்டவர் என்றும், பிறருக்கு உதவுவதில் பாரி வள்ளல் போன்றவர் என்றும், துணிச்சலாகப் பேசுவதில் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று முழங்கிய நக்கீரன் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும் பலரும் புகழ் மாலை சூட்டுவதைக் காண முடிகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐயா மூப்பனார் அவர்களுடன் தேர்தல் உடன்பாடு கொண்டிருந்த காலத்தில் அன்றைக்கு வளர்ந்து வரும் நடிகர் உலக நட்சத்திரமாகத் திகழ்ந்த விஜயகாந்த் அவர்களை சில நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிய நினைவுகள் எல்லாம் வந்து போகிறது. மதுரையில் முஸ்லீம் சமூக மக்களுடன் மிகமிக நட்போடும் உறவோடும் வாழ்ந்து வந்துள்ளார் என்று சிலாகித்துப் பேசியதை எல்லாம் கேட்டிருக்கின்றோம்.
தமிழகத்தில் பொது வாழ்வில் எல்லாருடைய பாராட்டுக்கும் உரிய நல்லுள்ளம் கொண்ட தலைவராக ஒளிர்ந்துள்ளார். அவரின் மறைவால் வாடும் அவருடைய இயக்கத் தோழர்களுக்கும் அவரின் அன்பு குடும்பத்தாருக்கும் இ.யூ. முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறது. மறைந்தும் மறையாத விஜயகாந்த் அவர்களின் ஆன்ம சாந்திக்கு நாம் அனைவரும் இறைஞ்சுவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)