
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (10/05/2022) இரவு முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை நகரின் பல்வேறு இடங்களில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடையாறு, அண்ணாநகர், அம்பத்தூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கொளத்தூர், தி.நகர், ஆவடி, போரூர், வில்லிவாக்கம், பூந்தமல்லி, பெருங்களத்தூர், குன்றத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மூன்று மணி நேரத்துக்கு மழை தொடரும். கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசானி புயல் காரணமாக, சென்னைக்கு வரும், புறப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக, மழை பெய்வதால் சென்னைக்கு வரும் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, புயல் காரணமாக, இன்று மிக கனமழையும், நாளை அதிகனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆந்திராவிற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.