ISRO chief thanked Chief Minister M.K.Stalin

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குத் தமிழக அரசு சார்பில், ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா கடந்த 2 ஆம் தேதி(02.10.2023) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றி இருந்தார்.

Advertisment

இந்த விழாவில் தமிழக விஞ்ஞானிகளான கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி. நாராயணன், ஏ. இராஜராஜன், எம். சங்கரன், ஜெ. ஆசிர் பாக்கியராஜ், மு. வனிதா, நிகார் ஷாஜி மற்றும் ப. வீரமுத்துவேல் ஆகியோர் தமிழக அரசு சார்பில் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில் “விண்வெளி துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும். தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் ஒன்பது பேரும் தங்களது உழைப்புக்கான அங்கீகாரமாகக் கருதி இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், “7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பொறியியல் படித்த மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் உதவித்தொகை வழங்கப்படும்” எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நடத்தியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சென்னையில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சந்திராயன் உள்ளிட்ட திட்டங்களுக்கு பங்களித்த தமிழக விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறினேன். சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காக குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளத்தை அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.