தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ கவுன்சில் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இதில் போட்டியிடும் மருத்துவர் கார்த்திகேயன் நாராயணன் இன்று சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தமிழ்நாடு, பாண்டிச்சேரி மருத்துவ கவுன்சிலர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் தற்போது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் வரும் டிசம்பர் 19ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை நடக்க உள்ளது. தமிழக முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மருத்துவர்கள் தங்கள் ஓட்டை பதிவு செய்ய இருக்கின்றனர். கடந்த தேர்தல் நீதி அரசர் மூலமாக நடைபெற்றது. ஆனால் இந்த முறை மருத்துவ கவுன்சில் மூலமாக தேர்தல் நடைபெற உள்ளது.
மரணம் அடைந்த 170 மருத்துவர்கள் பெயர் தேர்தல் பட்டியலில் உள்ளது. இந்த பெயரை ஏன் நீக்கவில்லை. இப்படி பல்வேறு குழப்பமான சூழ்நிலையில் மருத்துவ கவுன்சில் தேர்தல் நடைபெற்றால் தேர்தலில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே தேர்தலை ஓய்வுபெற்ற நீதி அரசர் மூலமாகவும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் தான் முறையான தேர்தல் நடைபெறும்” என்று தெரிவித்தார்.