Skip to main content

“கேட்பதாலோ நேரில் சென்று பார்ப்பதாலோ முதலீடுகள் வராது” - ஆளுநர் மறைமுகத் தாக்கு

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 'Investments will not come by asking or seeing in person'-Governor's indirect criticism

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு ஒன்பது நாள் பயணமாக ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பி இருந்தார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆளுநர், “நாம் கேட்பதாலோ நேரில் சென்று தொழிலதிபர்களை பார்ப்பதாலோ முதலீடுகள் கிடைக்காது” என தமிழக முதல்வரை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார்.

 

உதகையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ''நாம் கேட்பதாலோ அல்லது வெளிநாடு சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வந்து விடாது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை நாம் உருவாக்க வேண்டும். முதலில் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். முதலீடுகளை ஈர்க்க திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழி. தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை அரியானா மாநிலம் ஈர்த்து வருகிறது'' எனப் பேசி உள்ளார்.

 

ஏற்கனவே தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்திற்கான கொண்டாட்டத்தில் “மாநிலங்களுக்கென்று தனியாக கலாச்சாரம் இல்லை” என ஆளுநர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த பேச்சிற்கும் திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - தமிழக முதல்வர் உத்தரவு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Tamil Nadu Chief Minister orders Special camps to recover documents free of charge –

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பலருடைய புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் மழைநீரில் சேதமடைந்துள்ளது என்று பலரும் தங்களது வேதனையைத் தெரிவித்து வந்தனர். அதேபோல், மக்களின் பலருடைய முக்கிய ஆவணங்களான ஆதார் அட்டை, ரேஷன் அட்டை எனப் பல ஆவணங்கள் சேதமடைந்ததாகவும், மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கவலை தெரிவித்தனர்.  

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம் ஒன்றை அமைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்கு கட்டணமின்றி வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வருகிற 11 ஆம் தேதி அன்றும், சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் வருகிற 12 ஆம் தேதி அன்றும் தொடங்கப்படும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும். மேற்படி சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்கென, இ-சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரவுடி கருக்கா வினோத்தை விசாரிக்க என்.ஐ.ஏ மனு 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
NIA petition to investigate rowdy Karukka Vinoth

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பிற்பகல் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசினார். உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மொத்தமாக, பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி ரவுடி கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக காவல்துறை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் அண்மையில் ஒப்படைத்தது.

இந்த நிலையில், இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒன்றரை மணி நேரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தன்று பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சில்வான் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், தற்போது ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி பூவிருந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த மனுவில் அன்று பணியில் இருந்த காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என பலரையும் விசாரிக்க கோரியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.