
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு ஒன்பது நாள் பயணமாக ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பி இருந்தார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆளுநர், “நாம் கேட்பதாலோ நேரில் சென்று தொழிலதிபர்களை பார்ப்பதாலோ முதலீடுகள் கிடைக்காது” என தமிழக முதல்வரை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார்.
உதகையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ''நாம் கேட்பதாலோ அல்லது வெளிநாடு சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வந்து விடாது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை நாம் உருவாக்க வேண்டும். முதலில் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். முதலீடுகளை ஈர்க்க திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழி. தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை அரியானா மாநிலம் ஈர்த்து வருகிறது'' எனப் பேசி உள்ளார்.
ஏற்கனவே தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்திற்கான கொண்டாட்டத்தில் “மாநிலங்களுக்கென்று தனியாக கலாச்சாரம் இல்லை” என ஆளுநர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த பேச்சிற்கும் திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.