தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,512 லிருந்து குறைந்து 1,509 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,54,718 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 177 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 189 என்று இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,941 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 14 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,620 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,719 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,61,376 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். கோவை-186, ஈரோடு-137, திருவள்ளூர்-56, தஞ்சை-70, நாமக்கல்-56, சேலம்-55, திருச்சி-73, திருப்பூர்-72 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்றும் கேரளாவில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 32,803 கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 173 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே கேரளாவில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை கடுமையாக்கினால் மட்டுமே கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக கர்நாடக மாநிலங்களின் எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தமிழக மற்றும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் தொலைபேசியில் இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றுதான் தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.