Skip to main content

''மாணவர்களை குற்றப்படுத்துவதை விடுத்து பிரச்சனைகளின் மூலத்தை கண்டறிய வேண்டும்'' – உளவியல் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் பேச்சு

Published on 02/05/2022 | Edited on 03/05/2022

 

govt school

 

அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்த்துள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களை கொண்ட அமைப்பாக அரசுப்பள்ளி உரிமைக்குழு இயங்கிவருகிறது. இக்குழுவின் மூலம் 'அரசுப்பள்ளிகள் மீதான உளவியல் தாக்குதல் ஓர் அவசர நிலைப்பார்வை' என்ற தலைப்பில் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளர்களாக கல்வியாளர் ராசி.பன்னீர்செல்வம், அரசு தலைமை மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். முன்னதாக ஆசிரியர் பெரியார் செல்வம் அனைவரையும் வரவேற்றார்.

 

govt school

 

மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளும் அதனை அணுகும்  முறையும் குறித்து உளவியல் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் பேசியதாவது , ''கடந்த காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் விரும்பத்தகாத செயல்களை அடிப்படையாக வைத்து ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் விமர்சனம் செய்து வந்தனர். தற்போது ஒரு சில இடங்களில் நடக்கும் விரும்பத்தகாத மாணவர்களின் நடத்தையைக் காரணம் காட்டி ஒட்டுமொத்த அரசுப்பள்ளிகளின் நிலையையும் பொதுமைப்படுத்திப் பார்க்கின்றனர், இது வரவேற்கத் தகுந்ததல்ல. குறுகிய கால மகிழ்ச்சி, கதாநாயக மனப்பான்மை, எதிர்பாலின ஈர்ப்பு, பொது வலைதளங்களின் தாக்கம், சமூக விழுமியங்களை கற்பதற்கான சூழல் இன்மை, பசி, குடும்பங்களின் புறக்கணிப்பு, போதிய பராமரிப்பு , கண்டிப்பு இல்லாமை உள்ளிட்ட காரணிகளால் மாணவர்கள் மன உந்துதலுக்கும், மனவெழுச்சிக்கும் உட்படும்போது சில விரும்பத்தகாத செயல்கள் நடந்தேறுகின்றன. இது தற்காலிக செயற்பாடே ஆகும். இதனால் மாணவர்கள் முழுமையாக உருப்படமாட்டார்கள் என ஒதுக்குவதும், தொடர் புறக்கணிப்பும் மேலும் சிக்கலான மனநிலைக்கு அவர்களை அழைத்து செல்லுமே தவிர வாழ்வில் கரைசேர வாய்ப்பின்றி, தீவிரமான எதிர்மறை செயற்பாடுகளில் ஈடுபடும் நிலைக்கு தள்ளிவிடும் என்பதே உண்மை. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, அறிவியல் செயற்பாடுகளில் தொடர் நம்பிக்கையூட்டும் செயல்களை முன்னெடுப்பதும், நடத்தை மாற்றத்திற்கு உள்ளான மாணவர்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், உளவியலாளர்கள் துணையுடன் தேற்றுவதற்கான வலுவான முயற்சிகள் அவசியமானதாகும். மாணவர்களை புறக்கணிப்பதையும், குற்றப்படுத்துவதையும் தவிர்த்து அவர்களின் பிரச்சனைகளின்  மூலத்தை கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்'' என்றார்.

 

govt school

 

முன்னதாக  உரை நிகழ்த்திய ராசி பன்னீர்செல்வம், ''தற்போதைய சூழலில் மாணவர் ஆசிரியர் உறவு குறித்த சர்ச்சைக்குரிய காணொளிகள் நாட்டின் சட்டத்தையும் மதிக்காமல் அப்படியே கண்மூடித்தனமாகப் பரப்பப்படுகின்றன. இவை சமூகத்திலும் பெற்றோர்களிடமும் எதிர்மறை உளவியல் சிக்கலை உண்டாக்கி அரசுப்பள்ளிகள் மோசமானவை என்ற கருத்தாக்கத்தை உருவாக்கிட முனைகிறது. உண்மையில் தமிழகம் முழுவதும் இயங்கும் ஒருசில பள்ளிகளில் நிகழும் விரும்பத்தகாத செயல்களை அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் பொதுமைப்படுத்த முனைவது ஆபத்தானது. சமூகவலைத்தளங்களில் இயங்குபவர்களும், ஊடகங்களும் தத்தமது பொறுப்பை உணர்ந்து தகவல்களை பகிரவேண்டும்.

 

அரசின் இல்லம் தேடிக்கல்வி, நான் முதல்வன் உள்ளிட்ட புதுமையான திட்டங்கள் மாணவர்களுக்கு நேரடி பயனளிக்கக்கூடியவை, அரசுப்பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த அதிகபட்ச நிதி ஒதுக்கீட்டினை மாநில அரசு ஒதிக்கியிருப்பது  புதிய நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது. கல்வித்துறையின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முன்னெடுப்புகள் தொடர்ந்து நிகழ்வதால், அனைத்து மாநிலங்களும் உற்று நோக்குகின்றன.

 

இந்நிலையில் இதுபோன்ற எதிர்மறை பிரச்சாரங்களின் மீதும் பள்ளிக்கல்வித்துறை கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆசிரியர்கள் முழுமையாக கற்பித்தல் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை எட்ட வேண்டும். விலையில்லா பொருட்கள் வழங்குதல், ஊக்கத்தொகை, மாணவர் வளர்ச்சி மதிப்பீட்டிற்கான கணினி வழி தரவு உள்ளீடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, பொதுத்தேர்வு விண்ணப்பம், சான்றிதழ் உள்ளீட்டுத் தகவல் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள தனி அலுவலர்களை நியமித்து, ஆசிரியர்கள் முழுமையாக மாணவர்களோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேல்நிலை மாணவர்கள் பசியின் காரணமாக  மன அழுத்தத்தோடு கல்விகற்கும் நிலையை கருத்தில் கொண்டு மதிய உணவு வழங்கிட வேண்டும். மாணவர்களின் முகங்களை மறைக்காமல் சமூக வலைதளங்களில் பரப்பும் எதிர்மறை காணொளிகளைப் பரப்புவோர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி  உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பேரிடர் காலத்தை ஈடுசெய்வதாக மே மாதமும் பள்ளிகளை திறந்திருப்பதும் தேர்வுகளை நடத்துவதும், மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒருவித மன நெருக்கடிக்கு உள்ளாக்கும் செயலாகும். தொடர்ச்சியாக சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்குவது இயந்திரத்தனமானது. இதுநல்ல கல்விச்சூழலை பாதிக்கும். ஏனைய மாநிலங்களைப்போல குறைந்தபட்சம் ஒன்பதாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் வெப்பத்தாக்கத்தின் காரணமாக உடலியல், உளவியல் பிரச்சனைகளைக் கருத்திற்கொண்டு முழு தேர்ச்சி வழங்குவதோடு உடனடியாக விடுமுறை அறிவிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை நாமும் அரசும் இணைந்து முன்னெடுத்தால் குறைந்தபட்ச அளவிலாவது குழந்தைகளையும் அரசுப்பள்ளிகளையும் காக்க முடியும்'' என்றார்.

 

நிகழ்வில் ஆசிரியைகள் மணிமேகலை , மாலினி, வினோதினி , வனிதா, வித்யா, ராதா, கமலம், ஆசிரியர்கள் ரமேஷ்குமார், அழகேசன், மாயக்கண்ணன், ராஜாங்கம், விநாயகமூர்த்தி, சக்திவேல், ஐயப்பன், குருமூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இறுதியாக ரகமத்துல்லா நன்றியுரை கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்