cuddalore

ஏழை எளிய நடுத்தர மக்கள், கரோனாநோய்ப் பரவல் காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். இதனால் வருமானம் இல்லாமல் அரசு அளிக்கும் உதவிகளைக் கொண்டும் அரசியல் கட்சிகள் சமூக நல அமைப்புகள் அளித்துவரும் உதவிகளைக் கொண்டும் தங்களது அன்றாட நிலைமைகளைச் சமாளித்து வருகிறார்கள்.

Advertisment

இந்த நிலையில் தனியார் வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் போன்றவை கடந்த மூன்று மாதங்களுக்கு உரிய தவணை தொகையைக் கட்டசொல்லி பொதுமக்களை வலியுறுத்தக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள சில வங்கிகள் தனியார் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்த கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு அவர்கள் பெற்ற கடனை கட்டசொல்லி மிரட்டி வருவதாகக் கூறுகிறார்கள்.

Advertisment

இதுதொடர்பாக பல்வேறு பொதுநல அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டகண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் கடனைக் கட்டசொல்லி மக்களை மிரட்டி வருகிறது. இதைக் கண்டித்து பொதுமக்கள் நேற்று அந்த நிதி நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நிதி நிறுவனம் தங்களைத் தொடர்ந்து பணம் கட்டுமாறு துன்புறுத்துவதாகவும் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டுச்செலுத்துமாறு கறார் செய்து வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அந்நிறுவனம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் கேள்விப்பட்டு வந்த உயரதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisment