Skip to main content

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடியப் போராட்டம்

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

inciedent by opposition MPs in the Parliament premises

 

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், இரு அவைகளிலும் உடனடியாக இதுகுறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மதியம் இரு அவைகளும் கூடிய நிலையில், மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் குறித்து உடனே இரு அவைகளிலும் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

 

அதேபோன்று கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாளான நேற்றும் இரு அவைகளிலும் மணிப்பூரில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும். இந்தச் சம்பவம் குறித்துப் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் அவையில் மீண்டும் கூச்சல் குழப்பம் நிலவியதால் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு அவைகளும் முடங்கின. முன்னதாக நேற்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்து இருந்தார்.

 

இந்நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு  மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்தும், ஆம் ஆத்மி எம்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ராமர் கோவில் வரலாற்றை யாராலும் புறக்கணிக்க முடியாது” - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Union Home Minister Amit Shah says No one can ignore the history of Ram Temple

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

அதே சமயம் இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் (10.02.2024) நிறைவடைய உள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிலையில், இது தொடர்பான தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது அவர், “அயோத்தியில் ராமர் கோவில் திறப்பால் நீண்டகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தான் அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் இயக்கத்தை புறக்கணித்து இந்த நாட்டின் வரலாற்றை யாராலும் படிக்க முடியாது. 1528 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு தலைமுறையும் இந்த இயக்கத்தை ஏதோ ஒரு வடிவில் பார்த்துள்ளது. ஜனவரி 22, வரும் ஆண்டுகளில் ஒரு வரலாற்று நாளாக இருக்கும்” என்று கூறினார்.

Next Story

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு; பா.ஜ.க. எம்.பி.களுக்கு முக்கிய உத்தரவு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Parliament session ends today Important order for BJP MPs

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவை அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று மக்களவை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று முன்தினம் (08.02.2024) தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் (10.02.2024) நிறைவடைகிறது. வழக்கமாக சனிக்கிழமைகளில் நாடாளுமன்ற அலுவல்கள் நடக்காத நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடவுள்ளதால் மக்கள் மத்தில் எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது. அதே சமயம் நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நாடாளுமன்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று அவைக்கு வர தலைமை கொறடா உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில் ‘நாடாளுமன்றத்தில் முக்கிய அலுவல் இருப்பதால் கட்டாயம் அவைக்கு வர வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.