Skip to main content

போலீஸிடம் ‘பவர்’ காட்டிய மின்வாரிய ஊழியர்கள்! -ஏட்டிக்குப் போட்டியாக காவல்நிலையத்தின் மின்னிணைப்பு துண்டிப்பு!

Published on 30/08/2020 | Edited on 30/08/2020
incident in viruthunagar police station

 

‘உண்மையான பவர் எங்ககிட்டதான் இருக்கு..’ என்று காவல்துறையினரிடமே ஒரு காட்டு காட்டியிருக்கிறார்கள், மின்வாரிய ஊழியர்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ளது கூமாபட்டி. அங்கே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மின்வாரிய ஊழியர் சைமன் என்பவர் தனது டூ வீலரில் ட்ரிபிள்ஸ் போயிருக்கிறார்.  ‘ஒரு வாகனத்தில் மூன்று பேரா?’ எனக்கேட்டு,  அந்த வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். அப்போது சைமன் தரப்பு “நீங்க மட்டும் டிரங்கன் டிரைவ் கேஸ் போட்டு ஜி.எச்.சுக்கு கூட்டிட்டு போறப்ப ட்ரிபிள்ஸ்தானே போறீங்க? போலீசுக்கு மட்டும் தனிச்சட்டமா?” என்று பதிலுக்கு எகிறியிருக்கின்றனர். அதனால்   எரிச்சலான காவல்துறையினர்,  சைமனின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, கூமாபட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு போய்விட்டனர்.

‘போலீஸ் பவரை எங்ககிட்டயே காட்டுறீங்களா?’ என்று கடுப்பான மின்வாரிய ஊழியர்கள், உயரதிகாரி ஒருவரின் ஒத்துழைப்போடு, கூமாபட்டி காவல்நிலையத்தின் மின் இணைப்பை துண்டித்தனர். அதனால், காவல்நிலையப் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், கூமாபட்டி காவல்துறையினர், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளனர். அதன்பிறகு,  இரண்டு மணி நேரம் கழித்தே, காவல்நிலையத்துக்கு மின் இணைப்பு தந்துள்ளனர்.

நடந்த இந்த ‘ஏட்டிக்குப் போட்டி’ குறித்து, இருதரப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகா; பிரச்சாரத்தில் ருசிகரம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Radhika asked for vote and Delicious in the campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது கட்சியை பா.ஜ.கவில் இணைத்திருந்தார். இதையடுத்து, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்காக நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த வகையில், ராதிகா விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் கப்பலூர் பகுதியில், அ.ம.மு.க, பா.ம.க, த.மா.க கட்சி நிர்வாகிகளுடன் ராதிகாவும், சரத்குமாரும் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராதிகா, “என்னை நீங்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு சிறப்பான கூட்டணி. இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால், எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூட தெரியவில்லை. உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக இருந்து மக்கள் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் விருதுநகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்” என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் கிழக்கு சீமையிலே படத்தில் விருமாயி கதாபாத்திரம் போல் நடித்து காட்டுமாறு கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட ராதிகா, “அதை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?” எனக்கூறிய அவர், கிழக்கு சீமையிலே படத்தில் பேசிய வசனத்தை சொல்லி சினிமாவில் வருவது போல் மடியேந்தி மக்களிடம் வாக்கு கேட்டார். அதனை அங்கிருந்த மக்கள், ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். 

Next Story

போர்வெல் சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
A boy lose their live due to electric shock while turning on the borewell switch

திண்டிவனத்தில் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனத்தில் கிராமம் ஒன்றில் அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற தேவேந்திரன் என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சிறுவன் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது. போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.