incident in veppoor

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த 11 பேர் ஒரு காரில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுக்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு சென்றனர். நேற்று காலை கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் அருகே சென்றபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த குமார்(40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முத்துக்குமார் மகன் ராஜா(எ)ஜான்(30), துரைசாமி மனைவி ஞானாம்பாள்(53), முத்துக்கண்ணு மகன் சோலைராஜ்(58), மாரியப்பன் மகன் மகேந்திரன்(44), மகேந்திரன் மனைவி மலர்விழி(31), சோழராஜன் மகன் மகேந்திரன்(36), கண்ணன் மகன் விக்னேஷ்(20) உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisment

இந்த விபத்து குறித்து தகவலறிந்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியிலேயே ராஜா என்கிற ஜான் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேப்பூரில் நேற்று முன்தினம் காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் மாமியார், மருமகன் இருவர் பலியான நிலையில் நேற்று காலை கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.