Skip to main content

நூறாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம்... இன்றுவரை ஊரைக் காக்க ஒருநாள் விரதம் இருக்கும் பெண் குழந்தைகள்...!

Published on 15/01/2022 | Edited on 15/01/2022

 

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு நீண்ட நெடிய காலந்தொட்டு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முன்னோர்களின் கலாச்சார நிகழ்வுகளை இன்றைய தலைமுறையும் தொடர்ந்து வருவது சிறப்புதான். அப்படியான ஒரு நிகழ்வுதான் நோயிலிருந்து ஊரைக் காக்க பெண் குழந்தைகள் நடத்தும் விநோத திருவிழா.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில்தான் ஊரைக் காக்க பெண் குழந்தைகள் பங்கேற்று நடத்திய வித்தியாசமான திருவிழா நடந்தது.

 

செரியலூர் கிராமத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த கொப்பியம்மாள் என்ற பெண் குழந்தை தனது பெரியப்பா வீட்டுக்கு காட்டுப் வழியாக சென்றபோது காணாமல் போனதாகவும், பல நாட்களுக்குப் பிறகு கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பழமையான பாலை மரத்தின் அருகே அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விழுந்ததாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

 

சிறுமி கொப்பியம்மாள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் அதன் பிறகு ஊரில் யாரும் அம்மை போன்ற கொடிய நோயால் பலியாகக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கும் பெண் குழந்தைகள் (பருவம் எய்தாத பெண் குழந்தைகள்) நோய் நொடியிலிருந்து ஊரைக் காக்க பொங்கல் நாளுக்கு மறுநாள் விரதம் இருந்து வீட்டில் வெண் பொங்கல் வைத்துக் கன்று ஈனாத பசுங்கன்று சாணத்தில் ஒரு பெரிய பிள்ளையாரும், 92 சாணக் கொழுக்கட்டைகளும் பிடித்து அதில் கிருமிநாசினிகள் கூழைப்பூ, ஆவாரம்பூ, அருகம்புல், வேப்பிலை மற்றும் கரும்பு, வெல்லம் வைத்து 3 படையலிட்டு இரண்டு படையல்களை இதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஓலை கூடையில் வைத்து கொப்பியம்மாள் இறந்த பழமையான பாலை மரத்தடிக்கு கொண்டு செல்கின்றனர்.

 

குழந்தைகள் கொண்டுவரும் படையல் கூடைகளைப் பாலை மரத்தடியில் வைத்து குழந்தைகள், பெண்கள் கும்மியடித்து வழிபட்டு, பின்னர் ஊர்வலமாகத் தீர்த்தான் ஊரணி கரைக்குச் சென்று அங்கு ஓலைக்கூடையில் குழந்தைகள் கொண்டுவந்த பொருட்களைப் படையலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். இந்த விழாவில் சிறிய பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களின் அம்மா மற்றும் சகோதரிகள் ஓலைக்கூடைகளைத் தூக்கிச் செல்கின்றனர். வழிபாடுகள் முடிந்த பிறகே விரதம் முடிக்கின்றனர்.

 

'பல நூறு ஆண்டுகளாக எங்கள் முன்னோர்கள் தொடங்கிய இந்த கலாச்சார நிகழ்ச்சி இன்றைக்கு மட்டுமல்ல இனியும் இந்த கிராமத்தில் தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்கின்ற கிராம மக்கள், 'இப்படிச் செய்வதால் எங்கள் கிராமத்தில் அம்மையால் யாரும் இறப்பதில்லை. அதனால் முன்னோர்களின் வழிகாட்டல்படி தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தின் நம்பிக்கை இது. எங்கள் ஊரைக் காக்க ஒரு நாள் விரதம் இருப்பதை பெருமையாக நினைக்கிறோம்' என்றனர் பெண் குழந்தைகள்.

 

இதே நாளில் மற்றொரு பக்கம் இளைஞர்கள் போர்க்காய் தேங்காய் போட்டிகளை நடத்தி பலரையும் மகிழ்வித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.