Skip to main content

ஊரடங்கு நேரத்தில் “தீ”க்கு இரையான வீடு... வீடுகட்டித்தந்த அரசு மருத்துவருக்கு குவியும் பாராட்டு!! 

Published on 26/04/2020 | Edited on 27/04/2020

ஊரடங்கு நேரத்தில் தீ விபத்தில் வீடு இழந்த தொழிலாளி குடும்பத்துக்கு வீடு கட்டி கொடுத்து உபயோக பொருட்கள் வழங்கிய அரசு மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஊரடங்கு நேரத்தில் விவசாய வேலைக்கு சென்ற தொழிலாளியின் கூரை வீடு தீ பற்றி எரிந்துவிட்ட நிலையில் அந்த குடும்பத்திற்காக தனது சொந்த செலவில் கூரை வீடு கட்டிக் கொடுத்து வீட்டுக்குத் தேவையாக வீட்டு உபயோகப் பொருட்கள், மற்று அனைவருக்கும் புதிய உடைகள் வாங்கி கொடுத்து மனிதம் வாழ்கிறது என்பதை காட்டி இருக்கிறார் அரசு மருத்துவர் சௌந்தராஜன். அரசு மருத்துவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

incident in thanjai.... thankfull to govt doctor


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செங்கமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சத்யா,ராஜேஸ்வரி தம்பதிகள். விவசாயக் கூலித் தொழிலாளியான இவர்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தை உள்பட  மூன்று குழந்தைகள் உள்ளன.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வேலையில்லாமல் உணவுக்கே தவித்தவா்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சத்தியாவும், ராஜேஸ்வரியும் அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவா்களின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மாற்றுத் திறனாளி குழந்தை உள்பட மூன்று குழந்தைகளையும் மீட்டதோடு தீயை அணைத்தனர்.

 

incident in thanjai.... thankfull to govt doctor


இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பாத்திரங்கள், துணிகள் என அனைத்து பொருள்களும் எரிந்து நாசம் அடைந்தது. கட்டிய துணியோடு நின்றார்கள். குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இதையறிந்து வந்த பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி அரசின் சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார். செங்கமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், அதிமுக ஒன்றியச் செயலாளர் துரை. மாணிக்கம் ஆகியோரும் நிவாரண உதவிகளை வழங்கினர்.

இந்நிலையில், தீ விபத்து குறித்து அறிந்த, செருவாவிடுதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரும், பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் நேரில் சென்று அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு, உடனடி உதவிகளை வழங்கினார். வீடு இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுக்கவும் முன்வந்தார்.

அடுத்த சில நாட்களில் உடனடியாக தென்னங்கீற்றுகளால் புதிய கூரை வீடு கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் குடும்பத்தினருக்கு தேவையான உடைகள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், பழங்கள், பிஸ்கட், பால் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை அன்று டாக்டர் வி. சௌந்தரராஜன் நேரடியாகச் சென்று அந்தக் குடும்பத்தினருக்கு வழங்கினார். சுமார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை பெற்றுக் கொண்ட தம்பதிகள் கண்ணீர் மல்க டாக்டர் சௌந்தரராஜனுக்கு நன்றி தெரிவித்தனர். உடனடியாக பால் காய்ச்சி வீட்டில் குடி புகுந்தனர்.

இதையடுத்து ஊராட்சிமன்றத் தலைவர் செல்வம் வீடு கட்டி தந்தமைக்காக டாக்டருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்போது சமூக ஆர்வலர் கே.கான் முகம்மது, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், ஊரணி கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை பொருளாளர் ராஜூ, சுகாதார செவிலியர் லில்லி மேரி மற்றும் கிராமத்தினர் உடனிருந்தனர்.

 

incident in thanjai.... thankfull to govt doctor

 

இது குறித்து பேராவூரணி ஜகுபர் கூறும் போது, வட்டார மருத்துவ அலுவலர் செருவாவிடுதி சௌந்தராஜன் தொடக்கத்தில் இருந்தே ஏழைகள் மீது பற்றுக் கொண்டவர். அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்க சிற்ந்த சிகிச்சை அளித்து ஆலோசனைகள் சொல்வதுடன் அவர்களின் வசதிக்காக செருவாவிடுதி மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாமார நிலையத்தில் வளைகாப்பு திருவிழாவை தொடங்கி, வாரம் ஒரு முறை சத்தான உணவுகளை வழங்கினார். அதன் பிறகு தமிழக அரசே அந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டது. இப்பொதும் சுகாதரா நிலையத்தில் காய்கறித் தோட்டம் அமைத்து இயற்கையான காய்கறி மற்றும் பால், முட்டைகளை ஏழை கர்ப்பிணிகளுக்கு வழங்கி வருகிறார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் சர்க்கரை, உப்பு, இன்னும் ஏனைய நோய்களுக்காக சிகிச்சையும், தொடர்ந்து மாத்திரை வாங்கிய பொதுமக்களுக்க தடையில்லாமல் மாத்திரையும் சோதனைகளும் கிடைக்கும் விதமாக மருத்துவக்குழு அமைத்து வீட்டுக்கு வீடு சென்ற ஆய்வுகள் செய்து மருந்து மாத்திரை வழங்கி வருகிறார்கள். அவருடன் அவரது குழுவினர் துணையாக இருப்பதால் அவரால் அனைத்துப் பணிகளும் சிறப்பாக செய்ய முடிகிறது.

இப்போது வீ்ட்டை இழந்து தவித்த ஏழை தொழிலாளி குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்து வீட்டுக்கு தேவையான பொருட்கள், துணிகள் வழங்கியுள்ளது மனிதம் வாழ்கிறது என்பதை காட்டுகிறது. அதனால் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். இப்படியும் ஏராளமான மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நக்கீரன் சார்பிலும் பாராட்டுகள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாறி மாறித் தாக்கிக் கொண்ட அரசு மருத்துவரும் பெண் நோயாளியும்; வேலூரில் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Government doctor and female patient who took turns beating in Vellore

வேலூர் அடுத்த சாத்துமதுரை பகுதியைச் சேர்ந்தவர் சுபா(36) இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏழு நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் இவரைக் காண ஆண் உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு ரவுண்ட்ஸ் வந்த முதுகலை மருத்துவம் பயிலும் மருத்துவர் விஷால் என்பவர் சுபாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த ஆண் நபரிடம், இது பெண்களுக்கான வார்டு ஆண்கள் உள்ளே வரக்கூடாது என வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

நான் யார் தெரியுமா, வெளியில எல்லாம் போக முடியாது... நீ போ என ஒருமையில் மருத்துவரிடம் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றியுள்ளது. திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது நோயாளி சுபாவும் மருத்துவரை தாக்கியுள்ளார். அதோடு தான் அணிந்திருந்த காலணியால் மருத்துவரை தாக்கியுள்ளார். இது நோயாளிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்து பெண் செவிலியர்கள் தடுக்க முடியாமல், ‘ஐயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க...’ என கத்தினர். அதன்பின் அருகில் இருந்த நோயாளியை பார்க்க வந்தவர்கள் இரு தரப்பையும் விலக்கி விட்டுள்ளனர்.

மருத்துவர்கள் தரப்பிலிருந்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு கூறியதும், மருத்துவமனைக்கு வந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட முதுகலை மருத்துவ மாணவர் விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் பணியில் உள்ள மருத்துவரை தாக்குவதை தடுக்கும் சட்டத்தின் கீழ், பணி செய்ய விடாமல் தடுக்கும் சட்டம், தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மருத்துவரை தாக்கிய பெண் நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி சுபா கூறுகையில், நான் கடந்த ஏழு நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு மன அழுத்தமும் உள்ளது. இந்நிலையில் என்னை காண வந்த உறவினரை வார்டுக்கு வந்த மருத்துவர் ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். இதை நான் கேட்டதற்கு என்னையும், என் தாயாரையும் தகாத வார்த்தைகளால் அவதூறாக திட்டினார். பின்னர் மருத்துவர் தான் எங்களை முதலில் அறைந்தார். அதன் காரணமாகவே மருத்துவரை தாக்கியதாக தெரிவித்தார். 

இதுகுறித்து வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாப்பாத்தியிடம் கேட்டபோது, “பெண்கள் வார்டில் ஆண்கள் நுழையக்கூடாது. ஆனால் அந்த நபர் படுக்கையில் படுத்துள்ளார். இதை கேட்டதற்கு மருத்துவரை தாக்கியுள்ளார்கள். செவிலியர்கள் விலக்கிய போதும் செருப்பால் பெண் நோயாளி மருத்துவரை தாக்கியுள்ளார். புகார் அளித்துள்ளோம், காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அவர்கள் கூறியதில் உண்மைத்தன்மை இல்லை” எனக் கூறினார்.

அரசு மருத்துவமனையில் நோயாளி, மருத்துவர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

நிழற்குடையில் வசித்த ஐஸ் வியாபாரி- கோட்டாட்சியர் முயற்சியால் கிடைத்த வீடு; குவியும் பாராட்டுகள்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
An ice dealer who lived in Nilukudai - a house obtained through the efforts of Kotatsiyar; Accumulations abound


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.

பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.

இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும்  இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.