Skip to main content

ஒன்றரை லட்சத்துக்கு 8 லட்ச ரூபாய் கந்து வட்டி!-தலைமறைவான சிவகாசி வங்கி ஊழியரின் மோசடி நெட்வொர்க்!

 

sivakasi


சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில், கந்துவட்டி கொலை மிரட்டல் வழக்கொன்று பதிவாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு –

 

வட்டியோ வட்டி! வட்டி போடும் குட்டி!


சிவகாசியைச் சேர்ந்த தினேஷ் என்பவர், உணவுப் பொருள் நிறுவனம் ஒன்றின் விநியோகஸ்தராக இருந்து, கடைகளுக்கு உணவுப் பொருட்கள் சப்ளை செய்து வந்துள்ளார். சிவகாசி ஈக்விடாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள அவரிடம், அங்கு உதவி மேலாளராகப் பணிபுரிந்த விளாம்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், ‘அவசரத் தேவைக்கு நான் பணம் தருகிறேன்’ என்று அறிமுகமாகி, 2019, பிப்ரவரி மாதம், வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளார். ரூ.50,000 கடன் தொகைக்கு, முதலிலேயே ரூ.13,000 பிடித்துக்கொண்டு ரூ37,000 கொடுத்துள்ளார். அந்தத் தொகையை வாரம் ரூ.5,000 வீதம் 10 வாரங்களில் ரூ.50,000-ஆக, தினேஷ் கொடுத்துள்ளார். இன்னொரு விதமாக பாலமுருகன், ரூ.50,000-க்கு, ரூ.5,000 பிடித்துக்கொண்டு, முதலில் ரூ.45,000 கடன் கொடுத்திருக்கிறார். இதில் அசலையும் சேர்த்துத்தர வேண்டியதில்லை. ஆனால், 15 நாட்களுக்கு ஒருமுறை, வட்டியாக ரூ.5,000 தந்துவிட வேண்டும். அப்படி வட்டி கொடுக்காதபோது, ரூ.5,000 வட்டிக்கு அபராதமாக நாளொன்றுக்கு ரூ500 கொடுத்துவிட வேண்டும்.

தினேஷை உணவுப் பொருள் விநியோகஸ்தர் ஆக்கிய நிறுவனத்தின் கடுமையான நெருக்கடியால், தொடர்ந்து பாலமுருகனிடம் ரூ.1,42,000 வரை அவர் கடன் வாங்கியிருக்கிறார். வட்டி கட்ட முடியாமல் அபராதமும் அடிக்கடி செலுத்தி வந்திருக்கிறார். இந்த அளவுக்கு வட்டி கட்டி தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், அந்த உணவுப் பொருள் நிறுவனம், சப்ளையை முற்றிலுமாக நிறுத்திவிட, நஷ்டம் ஏற்பட்டு, தொழில் என்பதே இல்லாத நிலைக்கு தினேஷ் தள்ளப்பட்டுள்ளார். அதனால், பாலமுருகனுக்கு  வட்டியோ, அசலோ அவர் கொடுக்கவில்லை.

வட்டிப் பணமெல்லாம் பினாமிகளின் வங்கிக் கணக்குகளில்!

 

sivakasi


இந்த நிலையில்தான், தினேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலமுருகன், ‘அபராத தொகையே ஒண்ணே கால் லட்சத்தை தாண்டி விட்டது’ என்று வீடு தேடி வந்து தகராறு செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, பாலமுருகனிடம் கடந்த 20 மாதங்களில் கடனாகப் பெற்ற ரூ.1,42,000-க்கு வட்டியும் அபராதமுமாக தான் செலுத்திய தொகை ரூ.8,06,000 என, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்துள்ளார். கடன் வாங்கிய பணத்திற்கு ஈடாக, தொகை எழுதப்படாத,  தான் கையெழுத்திட்ட இரண்டு புரோ நோட்டுகளையும், தொகை நிரப்பப்படாத கையெழுத்திட்ட பேங்க் ஆஃப் இந்தியாவின் 10 காசோலைகளையும், தன்னிடமிருந்து  பாலமுருகன் பெற்றுக் கொண்டதாக, புகாரில் தினேஷ் குறிப்பிட்டுள்ளார். பாலமுருகனின் பினாமி பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குகள் மூன்றில் ’நெட் பேங்கிங்’ மூலம் வட்டி செலுத்தியது உள்ளிட்ட ஆதாரங்களையும் தந்துள்ளார்.

 

sivakasi


வட்டிக்கு விடுவது மிரட்டலான பறவையின் பணமா?  

சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷை போலவே, பாலமுருகனிடம் கந்து வட்டிக்குப் பணம் வாங்கி, விருதுநகர் மாவட்டத்தில் மாட்டிக் கொண்டவர்கள் பலர் உள்ளதாக, தகவல் கிடைத்திருக்கிறது.  மில் முதலாளிகள் போன்ற பெரிய செல்வந்தர்களுக்கு, ரூ.1 கோடி வரை கடன் கொடுத்து, நாளொன்றுக்கு 1 சதவீத வட்டியாக ரூ.1 லட்சம் வரை பெற்று வந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஈக்விடாஸ் வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே, வாடிக்கையாளர்களிடமும், வெளி நபர்களிடமும் இந்த அளவுக்கு, வட்டிக்கு கடன் கொடுத்தது தெரியவர, தற்போது அவரை வேலையிலிருந்து வங்கி நிர்வாகம் நீக்கிவிட்டது. இவ்வளவு பணம் பாலமுருகனுக்கு எங்கிருந்து வருகிறது? அ.ம.மு.க மேடைகளில் அடிக்கடி தென்படும் பாலமுருகன், கோடானு கோடிகளெல்லாம் அந்த அரசியல் பறவையிடமிருந்து வருவதாக, போதையில் உளறுவதும், ‘எங்கம்மா.. எங்கம்மா..’ என்று பிதற்றுவதும் உண்டாம். பாலமுருகனுக்குப் பின்னால், பலம் வாய்ந்த கந்துவட்டி கும்பலின் நெட்வொர்க் இருப்பதாகச் சொல்கின்றனர். தமிழகம் முழுவதும், கந்துவட்டி சுற்றுக்கு வரும் பறவையின் பணம்தான், விருதுநகர் மாவட்டத்திலும் பாலமுருகன் போன்ற கேடிகள் மூலம் இறைக்கப்படுகிறதாம்.

 

Ad


வட்டி கணக்கு டைரி எங்கே?

 

sivakasi


பாலமுருகன், கந்துவட்டி வசூலிக்கும் அவரது மாப்பிள்ளை ஜே.பி. மற்றும் பினாமிகளின் ஃபோன் தொடர்புகளை ஆராய்ந்தாலே, கந்துவட்டி கும்பலின் மொத்த நெட்வொர்க்கையும்  பிடித்துவிடலாம். கடன் வாங்கியவர்களிடமிருந்து பெறும் வார வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி, கந்துவட்டி கணக்குகளை, நாள்தோறும் தவறாமல் டைரியில் எழுதுவது பாலமுருகனின் வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த டைரியைக் கைப்பற்றினால், விருதுநகர் மாவட்டத்தில், பாலமுருகனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பட்டியலும் கிடைத்துவிடும் என்கிறது, காவல்துறை வட்டாரம்.

தன் மீது கந்துவட்டி, கொலை மிரட்டல் வழக்குப் பதிவாகி, போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதும், பாலமுருகன் தலைமறைவாகிவிட்டார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்