Skip to main content

'111 வி.ஏ.ஓக்களுக்கு லஞ்சம் கொடுக்கிறோம்...'-தொழிலாளர் சங்க நிர்வாகி பேச்சால் பரபரப்பு!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020
incident in pudukottai

 

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறோம் என்று இளைஞர்களின் கேள்விக்கு தொழிலாளர் சங்க நிர்வாகி பேசிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கியவர்கள் மீதும் லஞ்சம் வாங்கிக் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி மக்கள் பாதை அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் ஊராட்சிக்கு வந்த ஒரு  தொழிலாளர் சங்கத்தைச் சேர் பெண் பணியாளர் ஒருவர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியில் இருந்த பெண்களிடம் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் ரூ. 550 செலுத்தி உறுப்பினராக சேர்ந்து கொண்டால் மாதாந்திர உதவித் தொகை கிடைக்கும். அதனால் அனைவரும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் மற்றும் ரூ.550 உடன் வாருங்கள் என  உதவித் தொகை பெற்றுத்தருவதாக கூறியதால் சுமார் 700 க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

இது குறித்து உள்ளூர் இளைஞர்கள் சிலர் பல சந்தேகங்களை கேள்விகளாக எழுப்ப, வசூலில் இருந்த பெண் தொழிற்சங்க நிர்வாகிக்கு போன் செய்து இளைஞர்களிடம் பேச சொன்னார். அவுட் ஸ்பீக்கரில் மாற்றி ஒரு இளைஞர் சங்க நிர்வாகியிடம் பேசுவதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

அந்த உரையாடலில் நலவாரியத்தில்.. கடந்த மாதம் வரை விண்ணப்பம் எழுதி கொடுத்தால் போதும் ஆனால் தற்போது அனைத்தும் ஆன் லைனில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு  விண்ணப்பம் மற்றும் படங்கள் போன்ற அனைத்தையும் ஸ்கேன் செய்யவும் பிறகு பிங்கர் பிரிண்ட் உள்பட  ரூ.225 செலவாகும். விண்ணப்பத்திற்காக ரூ.175 செலுத்த வேண்டும். பிறகு புதுக்கோட்டையில் உள்ள 111 வி.ஏ.ஓக்களுக்கும் விண்ணப்பத்திற்கு ரூ. 100 வீதம் கொடுக்கனும்.

 

incident in pudukottai


அதாவது வி.ஏ.ஓக்களுக்கு லஞ்சம் கொடுக்கனுமா? ரூ.100 அவர்களுக்கு லஞ்சமாக கொடுக்கிறீர்களா? அப்ப முள்ளூர் வி.ஏ.ஓவுக்கும் லஞ்சம் கொடுத்திருக்கீங்களா? என்று இளைஞர் கேள்வி எழுப்ப பெயர் குறிப்பிட்டு சொல்ல விரும்பல 111 வி.ஏ.ஓக்களுக்கும் கொடுக்கிறோம் என்கிறால் சங்க நிர்வாகி.

சரி உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயனடையும் நபர்களுக்கு நலவாரியத்தில் பயனடைய வாய்ப்பு இல்லையே பின்பு எப்படி கிராம மக்களிடம் விண்ணப்பமும் பணமும் வாங்குறீங்க.. உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இருப்பதை உறுதி செய்தீர்களா? அவர்களிடம் விளக்கி சொன்னீர்களா என்று கேள்வியும் எழுப்ப, மீண்டும் கிராம நிர்வாக அலுவலர்களையே குறைசொல்லிக் கொண்டிருந்தவர். கலைஞர் கொண்டு வந்த திட்டத்திற்கு எதிராக உழவர் பாதுகாப்புத் திட்டத்தை ஜெ. கொண்டு வந்தார். அதில் அதிமுகவினர் பலரையும் சேர்த்து வைத்துள்ளனர் என்று போகிறது அந்த உரையாடல்.

இது குறித்து மக்கள் பாதை பொறுப்பாளர் ஞானபாண்டியன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளார். அவற்றுடன் ஆதாரங்களுடன் கூடிய காணொளியும் இணைத்துள்ளனர். அந்த மனுவில் முறைகேடாக லஞ்சம் பெற்று மக்களை ஏமாற்றி நலவாரியத்தில் உறுப்பினராக்குவதாக விண்ணப்பங்களை பெற்றவர்கள் மீதும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும்  நடவடிக்கை எடுத்து,  ஏழை கிராம மக்களிடம் பெற்ற பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.