Skip to main content

சுவர் விளம்பர மோதல்... காரணமாகும் கரூா் ஆட்சியரின் மௌனம்!

Published on 23/11/2020 | Edited on 24/11/2020

 

incident in karur political add

 

தமிழகத்தில் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், கட்சிகள் தங்களுடைய விளம்பரங்கள் மூலம் மக்களைக் கவரும் வகையில், புதிய புதிய வாசகங்களுடன் ஃபிளக்ஸ் பேனர், சுவர் விளம்பரங்கள், பதாகைகள் எனப் பல இடங்களில் பொதுமக்கள் பார்வைபடும் படியாக வைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஆனால், தோ்தல் ஆணையத்தின் மிக முக்கியமான சட்ட விதிமுறைகளில் ஒன்று, தோ்தல் சமயங்களில் எந்தக் கட்சி சார்ந்த உறுப்பினர்களும், இதுபோன்ற விளம்பரங்களைச் செய்யக்கூடாது என்பதுதான். ஆனால், கரூா் மாவட்டத்தில் இந்தச் சுவர் விளம்பரங்களால் கட்சிகளுக்குள் மோதல் ஏற்படும் நிலை உள்ளது. ஆங்காங்கே, சுவா் விளம்பரங்களை அழிக்கும் சம்பவமும் நடந்துள்ளது. கரூா் மாவட்டத்தில் இருந்து மதுரை செல்லும் நான்குவழிச் சாலையில், எழுதப்பட்டிருந்த விளம்பரத்தை அழிக்க வேண்டும் என்றும் அப்படி அழிக்காவிட்டால் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை, தரக் குறைவாக எல்லாச் சுவர்களிலும் எழுதுவேன் என்றும் பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை எச்சரித்திருந்தார்.

ஆனால், அதே சாலையில், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வினா் எழுதியிருக்கும் சுவர் விளம்பரங்களைக் கண்டும் காணாமலும் கடந்து செல்வதாக, பாஜகவினரை எதிர்த்தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், "இந்தப் பிரச்சனையில், கரூா் மாவட்ட ஆட்சியா், தோ்தல் ஆணையத்தின் விதிமுறையைப் பின்பற்றி, எல்லாச் சுவர் விளம்பரங்களையும் அழிக்காமல், அ.தி.மு.க.விற்கு ஆதரவாகச் செயல்படுவது கண்டிக்கதக்கது" என்று திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியா் மௌனம் காப்பது, கட்சிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.