மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசு அலுவலர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டி பகுதியிலுள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 45 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பம் நடப்பட்டிருந்தது. கொடிக் கம்பம் நடப்பட்டதற்கு முறையாக அனுமதி வாங்கப்படவில்லை என வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கொடியேற்ற அனுமதி மறுத்திருந்தனர். இதனால் கடந்த டிசம்பர் ஏழாம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கொடியை ஏற்றுவதற்கு வருவதற்கு முதல் நாள் கொடியேற்ற அனுமதி வேண்டும் என விசிக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் கொடியை ஏற்ற வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அனுமதி அளித்தனர். அதனடிப்படையில் திருமாவளவன் கொடியை ஏற்றிவைத்தார். இந்நிலையில் விசிகவின் 45 அடி நீளம் கொண்ட கொடிக்கம்ப விவகாரத்தில் முறையாகப் பணியை மேற்கொள்ளாமல் கொடிக்கம்பம் நடுவதை தடுக்கத்தவறிய காரணத்திற்காக சத்திரப்பட்டி வருவாய் அலுவலர் அனிதா, காவனூர் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், வெளிச்சநத்தம் கிராம நிர்வாக உதவியாளர் பழனியாண்டி ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் ஏற்கனவே புதூர் பகுதியில் விசிக கொடிக்கம்பம் நடுவதில் பிரச்சனை ஒன்று உருவானது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் வெளிச்சநத்தம் பகுதியில் விசிக கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மூன்று பேர் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.