/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sale pri434.jpg)
சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், சரவணம்பட்டி காவல் சரகத்திற்குள் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் சிவா என்கிற பாபு, அமர்நாத் உள்ளிட்ட பத்து பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
இந்நிலையில், சிறைக்குள் அவர்கள் சட்ட விரோதமாக செல்போன் பயன்படுத்தி வந்துள்ளனர். அதை சிறை வார்டன் கார்த்திக் என்பவர் கண்டுபிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவாவும், அமர்நாத்தும் பல் துலக்கும் பிரஷ்ஷால் கார்த்திக்கை கடந்த ஏப். 18- ஆம் தேதியன்று, சிறை வளாகத்தில் வைத்து சரமாரியாக தாக்கினர்.
சக வார்டன்கள் விரைந்து வந்து கார்த்திக்கை மீட்டனர். அவர் அளித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் சிவா, அமர்நாத் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவாவை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கும், அமர்நாத்தை திருச்சி மத்திய சிறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மே 2- ஆம் தேதி காலை, சிறை கைதி ஒருவரை சக கைதிகள் தாக்கிய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுரையில் நடந்த கொலை வழக்கில் கைதான கார்த்தி, யுவராஜ், லெனின் ஆகிய மூன்று பேர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். திங்கள்கிழமை (மே 2) காலை மற்றொரு கைதி, தவறுதலாக லெனின் மீது இடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த லெனினின் கூட்டாளிகள், அந்த கைதியை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்த சிறை வார்டன்கள் அவரை மீட்டு, சிறை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தாக்குதல் நடத்திய மூன்று கைதிகளையும் பிடித்து தனி அறையில் அடைத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சிறை வார்டன்கள் தரப்பில் கூறுகையில், ''ஒவ்வொரு கைதியையும் தனித்தனி பிரிவில் அடைக்க வேண்டும். சிறைக்குள் உயர் பாதுகாப்புப் பிரிவு, தண்டனை கைதிகள் பிரிவுகள் உள்ளன. சமீப காலமாக தனித்தனியாக அடைக்காமல் ஒரு சில அதிகாரிகள் கைதிகளை தங்கள் இஷ்டப்படி அடைத்து வைத்துள்ளனர். போதிய கண்டிப்பு இல்லாததால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன,'' என்றனர்.
கைதிகள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து சிறைத்துறை நிர்வாகமும், கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது. சேலம் சிறையில் சமீக காலமாக அரங்கேறி வரும் கைதிகள் மோதல், கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையேயான மோதல் சம்பவங்களால் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)