Skip to main content

ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருள் விற்பனைக்கு ஊக்கத்தொகை!

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

Incentives for sale of unregulated items in ration shops!

 

ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள், சோப்பு, பற்பசை உள்ளிட்ட கட்டுப்பாடற்ற பொருள்களின் விற்பனையை பெருக்குவதற்காக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

ரேஷன் கடை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கட்டுப்பாடற்ற பொருள்களின் விற்பனையை மேம்படுத்தி, கூட்டுறவு நிறுவனங்களை வளம்பெறச் செய்ய ஏதுவாக, விற்பனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும்படி தமிழ்நாடு விநியோக ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், மண்டல இணைப்பதிவாளர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

 

ஊட்டி டீ, காதி பொருள்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் இதர பொருள்களான பனை வெல்லம், சிறு தானியங்கள் ஆகியவற்றின் விளிம்புத்தொகை குறைவாக உள்ளதால், அவற்றின் விற்பனைக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டியதில்லை. இப்பொருள்கள் தவிர, அனுமதிக்கப்பட்ட பிற கட்டுப்பாடற்ற பொருள்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும்போது, விற்பனையாளர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஊக்கத்தொகை வழங்க அனுமதிக்கப்படுகிறது.

 

அதன்படி, ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் 50 ஆயிரத்துக்கு அதிகமாகவும், கிராமப்புற கடைகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த விற்பனையில், 10 சதவீதம் மற்றும் அதற்கு மேல் விளிம்புத்தொகை உள்ள கட்டப்பாடற்ற பொருள்களின் விற்பனையை மட்டும் ஊக்கத்தொகை கணக்கீட்டுக்கு எடுக்கப்பட வேண்டும்.

 

இந்த இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விற்பனையாளர்களுக்கு அந்த மாதம் செலுத்தப்படும் விற்பனை தொகையில், ஒரு சதவீதம் ஊக்கத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும். முதன்மை சங்கத்திடம் இருந்து இணைப்பு சங்கங்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்யும்பட்சத்தில் இந்த ஊக்கத்தொகை இணைப்பு சங்க கடை விற்பனையாளருக்கு மட்டும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பதிவாளர் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனல் பறக்கும் தேர்தல் களம்; தி.மு.க.வில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Important announcements in DMK for lok sabha election

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

Important announcements in DMK for lok sabha election

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, பெரம்பலூர், கோவை, ஈரோடு, தென்காசி, தேனி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை நாளை (20.03.2024) காலை 10.00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்படுகிறது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மாநிலம் முழுவதும் பயணித்து மக்களை நேரில் சந்தித்து, கருத்துக்களைக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் 21 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் நாளை காலை வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். அதற்கு மறுநாளான 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். 

Next Story

முதல்வரின் உத்தரவு; ஒரு மணி நேரத்தில் ஓடோடி வந்த அதிகாரிகள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Padma Sri Chinnapillai's manai patta was searched for in an hour

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உறுதி அளித்தபடி தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வீடு வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளைக்கு புதிதாக வீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு கட்டுமான பணியானது இந்த மாதமே தொடங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் மதுரை சின்னப்பிள்ளைக்கு ஒரு சென்ட் மனைக்கான  கூடுதல் பட்டா அவரைத் தேடிச்சென்று அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.