
தமிழகத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதன்படி தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 27 மாவட்டங்களில் உள்ள கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வார்டு மறுவரையறை செய்யப்பட்டு 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 9 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.
அதன்படி 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்வானவர்களின் பதவிக்காலம் ஜனவரி மாதம் 5ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. அதே சமயம் இதற்கான தேர்தல் நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் 45 நாட்களுக்கு முன்னர் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இருப்பினும் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இத்தகைய சூழலில் தான் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பட்டனர். அதே சமயம் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வரை உள்ளது.
இந்நிலையில் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பதவிக்காலம் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு வரும் மே மாதத்தில் (மே -2024) இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 பதவியிடங்களும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 பதவியிடங்களுக்கும் இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தில் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.