16 ஆவது ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி குஜராத், சென்னை, லக்னோ, மும்பை என 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன. முதல் இரு இடங்களைப் பிடித்துள்ள சென்னை, குஜராத் அணிகள் முதல் ப்ளே ஆஃப் போட்டியிலும் மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ள அணிகளான லக்னோ - மும்பை அணிகள் எலிமினேட்டர் போட்டியிலும் விளையாட உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மோதுவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுவது சென்னைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்யவுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் போட்டிகள் காரணமாக டிக்கெட் விற்பனை, டி-ஷர்ட் விற்பனை என கோலாகலம் கண்டு வருகிறது. இந்த நிலையில் சிறுவன் ஒருவன் அந்த பகுதியில் ஓடி ஓடிச் சென்று டி-ஷர்ட் விற்பது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆவடியை சேர்ந்த ஏழாவது வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் தாய்க்கு உதவும் நோக்கத்திற்காக டி-ஷர்ட் விற்பதாக தெரிவித்தான். தான் இதுவரை உள்ளே சென்று போட்டியை கண்டு ரசித்ததில்லை. தான் எந்த அணிக்கும் பேன் கிடையாது. ஆனால் கோடை விடுமுறையில் அம்மாவிற்கு உதவுவதற்காக டி-ஷர்ட் விற்பதாகவும் தெரிவித்தான்.