Skip to main content

ஆண் நண்பனுடன் சேர்ந்து மனைவி போட்ட திட்டம்! காரை ஏற்றிக் கொன்ற கணவர்!

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

Illegal relationship wife and husband arrested by nagapattinam police
மதன்கார்த்தி

 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆசிரியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வினோத் விக்டர். இவர் கப்பலில் பணியாற்றி வருகிறார். அதேசமயம் இவர், வேளாங்கண்ணி மாதா குளம் அருகில் ஒரு தங்கும் விடுதி நடத்தி வருகிறார். வேலை நிமித்தமாக கப்பலுக்கு சென்றுவிடுவதால் விடுதியைச் சரிவர நிர்வகிக்கமுடியாமல் போனதால் அதே பகுதியைச் சேர்ந்த மதன்கார்த்தி என்பவரிடம் ஒருவருட குத்தகைக்கு வழங்கியுள்ளார். 

 

இந்தச் சூழலில், மதன்கார்த்தி, வினோத் விக்டரின் மனைவியோடு பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு விடுப்பில் வேளாங்கண்ணிக்கு வந்த வினோத், கார்த்தியின் நடத்தையிலும், விடுதி நிர்வாகத்திலும் சந்தேகம் ஏற்பட்டு, ஒப்பந்த செய்யப்பட்ட ஒரு வருட குத்தகைக்காலம் முடிந்ததும் விடுதியை காலி செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி மறுக்கவே இருவருக்கும் இடையே சில மாதங்களாக பிரச்சனை மூண்டபடியே இருந்தது. 

 

இந்த நிலையில் வினோத், தனது மனைவியோடு நாகப்பட்டினம் சென்றுவிட்டு வேளாங்கண்ணி திரும்பியுள்ளார். அப்போது, வேளாங்கண்ணி அருகே மதன்கார்த்திக்கும், அவரது நண்பர்கள் சிலரும் வினோத் வந்த காரை மறித்துள்ளனர். அந்த இடத்தில் முன்கூட்டியே திட்டமிட்டது போல காரை ஓட்டிவந்த டிரைவர் ஆல்வினும்,  வினோத்தின் மனைவியும் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டனர். 

 

Illegal relationship wife and husband arrested by nagapattinam police
அமுதன்

 

வினோத் விக்டரின் காரை மதனின் சகாக்கள் அடித்து நொறுக்கி தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க காரை ஸ்டார்ட் செய்த வினோத் வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அவரை விடாமல் தனது நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மதன், வேளாங்கண்ணி ஆர்ச் அருகே காரை மறிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத், காரை மறித்த மதன் மற்றும் அவரது நண்பர் அமுதன் ஆகியோரை அடித்து தூக்கினார்.


இதில் இடது கை மற்றும் இடது மார்பு ஆகிய இடங்களில் படுகாயமடைந்த மதன் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அவருடைய நண்பர் அமுதன் படுகாயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வலது கண்ணில் ரத்தக்காயத்துடன், காரோடு நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் வினோத் விக்டர் ஆஜராகினார். 


வேளாங்கண்ணி போலீசார் வினோத் விக்டர் மற்றும் அவருடைய மனைவி மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்தை மீறிய உறவால் கணவனை கொலை செய்ய மனைவி திட்டம் தீட்டியதும், அதற்கு ஓட்டுநர் உதவியாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.