'கோவில் வாழ்ந்தால் குடி வாழும். ஆவுடைப்பொய்கை தெப்பத்தில் தேர் ஓடினால் ஊர் சிறக்கும்' இதனை ஆதிகாலத் தமிழர்கள் அர்த்தமில்லாமல் சொல்லவில்லை. விவசாயம் சார்ந்த வேளாண் குடி மக்கள், பிற தொழிலைக் கொண்டவர்கள், தங்களின் தொழிலின் ஆரம்பத்திலும் முடிவிலும், ஆண்டவனைச் சார்ந்தே வந்துள்ளனர். குறிப்பாக தை மாதங்களில் அறுவடை செய்யப்படும் முற்றிய நெல்மணிகளை அறுவடை செய்கிற மக்கள் அந்த நெல்லின் புத்தரிசியைக் கொண்டு தைத்திருநாளில் பொங்கலிட்டு சூரியக் கடவுளுக்குப் படையலிட்டு வழிபடுவது மரபு. அதன் காரணமாகவே விவசாயமும், ஊரும் செழிப்பானது என்ற நம்பிக்கை கொண்டவர்கள். காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்படி நடந்தால் தான் குடிமக்கள் வாழ்வர் என்று நம்பியவர்கள். ஆன்மீகம் சார்ந்த எந்த ஒரு விழாவையும் இதுவரை நிறுத்தியதில்லை.

தென்காசி மாவட்டத்தின் கோவில் நகரைக் கொண்ட சங்கரன்கோவில் தொழில் நகரம். இங்குள்ள சங்கரநாராயண சுவாமி ஆலயத்தின் ஒவ்வொரு ஆடிமாதப் பௌர்ணமியும் சிறப்பு வாய்ந்தது. அன்னை ஸ்ரீ கோமதியம்மனுக்கு, சர்வேஸ்வரன் அரியும் சிவனுமாக ஒரு சேர உடலில் அவதாரமெடுத்து சங்கர நாராயணராகக் காட்சி கொடுத்த வரலாற்று நகரம். தென்மாவட்டத்தின் முக்கிய சிவஸ்தலம். அந்த ஆடி மாதத்தில் திருத் தேர்கள் சிறப்பாக வலம் வரும்.

அதேபோன்று இந்த ஆலயத்திற்கான ஆவுடைப்பொய்கையில் நடக்கிற தெப்ப உற்சவம் தென்மாவட்டத்தில் பிரசித்தியானது. ஒவ்வொரு தைமாதக் கடைசி வெள்ளிக்கிழமையன்று சுவாமியும் அம்பாளும் எழுந்தருளுகிற தேர் ஆவுடைப்பொய்கை தெப்பத்தில் இரவு நேரம் ஜெகஜ்ஜோதியாய் மின்னியபடி வலம் வரும். அது சமயம் தென்மாவட்ட மக்கள் இந்த விஷேச நாளில் திரண்டு ஆராதிப்பர். நகரமும் சிறப்பானது . அப்பேர்பட்ட ஆவுடையப் பொய்கைதெப்பம் பராமரிப்பின்றி சிதிலமடைந்ததால் 2016 முதல் 2020 வரை தொடர்ந்து ஐந்து வருடங்கள் தெப்பத்திருத்தேர் ஓடவில்லை. இதனால் கவலை கொண்ட நகரப் பக்தர்களின் தொடர்வற்புறுத்தலால் கடந்த ஆண்டு பிப். 12ல் தெப்பத்தேர் ஓடியது. அதன்பின் ஆவுடைப் பொய்கை தெப்பம் பராமரிக்கப்படாததால் சுற்றுச்சுவர் சிதிலமடைந்தும், தண்ணீரில் அடர்த்தியாகப் பாசியும் படர்ந்தது. களையிழந்தது தெப்பம்.
தற்போது இதனை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் நகர அய்யப்ப சேவா சங்கத்தினர் செந்திலாண்டவன் திருச்சபையினர் அறநிலையத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், 'நகரிலுள்ள அனைத்து ஆன்மீக அமைப்பினர், தன்னார்வலர்கள் பிப் 6ம் தேதி ஆவுடைப்பொய்கை தெப்பத்தைச் சீர் செய்ய முடிவு செய்துள்ளோம். பொய்கை தீர்த்தம் நகராட்சியின் பொறுப்பில் வருவதால் அவர்கள் சீரமைப்பிற்கான அனைத்து பொருட்களையும் வழங்கினால் போதும் நாங்கள் பணிகளை மேற்கொள்வோம். பிப்ரவரி வெள்ளியன்று திருத்தேர் சிறப்பாக வலம் வரும்' என்று வலியுறுத்தியுள்ளனர். 'அதிகாரிகள் மனது வைத்தால் பொய்கை தெப்பம் சீராகும். திருத்தேர் பவனி வரும். நகரம் பொலிவுபெறும்' என்ற எதிர்பார்ப்பிலிருக்கின்றனர் மக்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)