பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் என்ற நிலையில், அவருக்கு தமிழக அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தியா திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் ''முதல்வரை பார்த்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. என்னை கூப்பிட்டு வாழ்த்துகள் சொன்னார். உனக்கு கண்டிப்பா வேலை தருகிறேன் என சொல்லியிருக்கிறார். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. வெள்ளிப் பதக்கம் வென்றது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் தங்கம் வெல்ல முடியவில்லையே என கொஞ்சம் ஃபீலிங்காவும் இருக்கிறது. நான் இங்கிருந்து செல்லும்பொழுதே தங்கம் வெல்ல வேண்டும் என்றுதான் சென்றேன். ஆனால் மழை வந்து ஜம்ப் பண்ண முடியாமல் போய்விட்டது. கண்டிப்பாக அடுத்தமுறை தங்கம் வென்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன். கிளாஸ் 1 ஜாப் கேட்டிருந்தேன். அதை கண்டிப்பாக தருவதாக முதல்வர் சொல்லியிருக்கிறார். இன்னும் 10 நாட்கள் விட்டு மீண்டும் பயிற்சியை தொடங்க இருக்கிறேன். அடுத்த ஒலிம்பிக்கில் கோல்ட் ரெக்கார்டு வைக்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பிரதமரும் எனக்கு ஃபோன் செய்து பக்கத்து வீட்டில் பேசுபவர்களை போல் நன்றாக பேசி என்னை ஊக்கப்படுத்தினார். ஒரு நாள் உன்னை சந்திப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார்'' என்றார்.