Skip to main content

ஐ.பெரியசாமி தொகுதியில் ஆளுங்கட்சியின் சதி அம்பலம்! தண்ணீருக்காகப் போராடும் மக்கள்!!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

I periyasami water issue
                                                               மாதிரி படம்


ஐ.பெரியசாமி தொகுதியான ஆத்தூர் தொகுதியில் உள்ள, காமராஜர் நீர்த் தேக்கத்திற்கு மேல் இருக்கும், பெரிய கன்னிமார் கோவில் நீர் வரத்து வாய்க்காலுக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் பருவகால மழை காலங்களிலிருந்து தண்ணீர் வருவது வழக்கம்.

 

இப்படி வரக்கூடிய தண்ணீர் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதிக்கும் மற்றொருபுரம் ஆத்தூர் நீர்த் தேக்கம் சென்று அதன் வழியாக கொடகனாற்றுக்கும் செல்லும். அதற்காக பாறைக்கற்களை வைத்து தடுப்பணை போன்ற ஒரு அமைப்பை முன்னோர்கள் ஏற்படுத்தியிருந்தனர். அதன்மூலம், கசிவு நீர்கள் அந்தக் கற்பாறைகளுக்கிடையே செல்லும். அது போல் மழை காலங்களில் தடுப்பணையைத் தாண்டி, அதிக அளவில் தண்ணீர் டேமுக்கு செல்லும். அதன் மூலம் தான் ஆத்தூர் தொகுதியில் உள்ள நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் விவசாயிகள், ஆத்தூர் பகுதி விவசாயிகள், கொடகனாறு விவசாயிகள் என மூன்று தரப்பு விவசாயிகளும் தங்கள் நிலங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டும் குடிநீருக்காகவும் இந்தத் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.

 

இந்த நிலையில்தான், கடந்த சில வருடங்களாக மூன்று தரப்பு விவசாயிகளுக்கிடையே தண்ணீர் பகிர்ந்து கொள்வதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது பாறைகற்களால் ஆன தடுப்பணை மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் கான்கிரீட்டால் ஆன சிமெண்ட் தளம் போட்டு அடைத்ததால், ஆத்தூர் நீர்த் தேக்கத்திற்கும், கொடகனாற்றுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை மூலம் வரக்கூடிய தண்ணீர் செல்வதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்ததுடன், இந்த விஷயத்தை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஐ.பி.பெரியசாமி காதுக்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் ஐ.பி. பெரியசாமியும் மூன்று பகுதி விவசாய சங்கப் பொறுப்பாளர்களை அழைத்துக்கொண்டு மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமியை சந்தித்து தண்ணீர் பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமென வலியுறுத்தினார். 

 

I periyasami water issue


அதன் அடிப்படையில்தான், ஒரு வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது பிரச்சனைக்குரிய தண்ணீரை ஐ.பெரியசாமி தனது விவசாய நிலத்திற்குப் பயன்படுத்தி வருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. மற்றொருபுறம் விவசாயிகளும், பொதுமக்களும் கான்கிரீட் மூலம் போடப்பட்ட அந்த சிமெண்ட் தளத்தை உடைத்துத் தண்ணீரை திறந்து விடக் கோரி கறுப்புக் கொடி ஏந்தி தொடர் போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
 

"மூன்று தரப்பு விவசாயிகளுக்குமே பருவமழை காலங்களில் தண்ணீருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இடைப்பட்ட காலங்களில் வரக்கூடிய தண்ணீரில் 20சதவீதம் மட்டும் அந்தத் தடுப்பணை போன்ற கற்களின் இடையே கசியும் நீர், அந்தப் பகுதிகளுக்குப் போகும். அதைத்தான் கடந்த 2014 -இல் இதே அ.தி.மு.க ஆட்சியில் எங்களது நரசிங்கபுரம் ராஜவாய்க்காலுக்கு சிமெண்ட் வாய்க்கால் அமைக்க கான்கிரீட் தளம் போடும்போதே, நாங்கள் போடக்கூடாது என்று கூறினோம். அதையும் மீறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் போட்டுவிட்டனர். அதனால்தான் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து, இரு தரப்பு விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வருகிறார்கள்.

 

அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். வேண்டுமென்றால், சிமெண்ட் வாய்க்கால் பகுதியிலிருந்து 20சதவீதம் தண்ணீர் தரத் தயாராக இருக்கிறோம். அதைவிட்டுவிட்டு, போட்ட சிமெண்ட் தளத்தை உடைக்க நினைத்தால், பிரச்சனைதான் எற்படும். இது முழுக்க முழுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தவறே தவிர, ஐ.பெரியசாமிக்கு இதில் எந்தச் சம்மந்தமும் இல்லை. வேண்டுமென்றே இந்தப் பிரச்சனையில் அவரை இழுத்து அவதூறு பரப்பி வருகிறார்கள்" என்றார் சித்தயன்கோட்டை நஞ்சை, புஞ்சை பட்டாதாரிகளின் சங்கச் செயலாளரான செல்லமரக்காயர்.
 

இது சம்பந்தமாக ஆத்தூர் பகுதி பட்டாதாரி சங்க விவசாயியான சேசுராஜிடம் கேட்ட போது, "பாறை கற்களால் கட்டப்பட்ட அந்தத் தடுப்பணை மூலம் எங்களுக்கு 40சதவீதம் தண்ணீர் வந்தது. அதை அடைத்ததின் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் தரிசாக உள்ளது. அதனால்தான் போட்ட கான்கிரீட் சிமெண்ட் தளத்தை உடைத்து, வழக்கம் போல் தண்ணிர் வரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகிறோம்" என்று கூறினார்.


"ஆத்தூர் டேம் கட்டாதபோது, ஒட்டுமொத்த தண்ணீரும் கொடகனாற்றுக்குத்தான் வரும். அதன்மூலம், ஆத்தூர் முதல் வேடச்சந்தூர் வரை கிட்டதட்ட 25 கி.மீட்டருக்கு உள்ள விவசாய நிலங்கள் செழிப்பாகக் காட்சி அளித்து வந்தது. காமராஜர் காலத்தில் இந்த ஆத்தூர் டேம் கட்டும்போது, அந்தப் பெரிய கன்னிமார் கோவில், நீர் வரத்து ஓடையைத் திருப்பிவிட்டும், கற்களை வைத்தும் தடுப்பனை அமைத்து டேமை கட்டினார்கள். அதன்பிறகு அந்தத் தண்ணீரை முழுமையாக டேமுக்குத் திருப்ப முடியவில்லை. இருந்தாலும் பருவமழை காலங்களில் டேமுக்க அதிகமாக தண்ணீர் வரும். அந்தத் தண்ணீரைத்தான் கொடகனாறு ஆற்றுக்கும் திறந்துவிடுவார்கள். ஆனால், கடந்த 6 வருடங்களாகக் கொடகனாற்றில் தண்ணீரும் வருவதில்லை.

 

அதனால்தான், பீஸ் கமிட்டி கூட்டத்தில் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் தண்ணீரை 15 நாட்களுக்குத் திருப்பிவிட வலியுறுத்தினோம். அதன் அடிப்படையில், ஆத்தூரிலிருந்து பாலராஜக்காப்பட்டி வரையுள்ள கொடகனாற்றை 70 இலட்சம் செலவில் ஐ.பெரியசாமி, தூர்வாரி கொடுத்தார். அதன்பிறகுதான் தண்ணீரும் வந்தது. அந்தத் தண்ணீரும் முழுமையாக வரவிடாமல், ஆளுங்கட்சியினர் தடுத்துவிட்டனர். அதனால்தான் இப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். எங்கள் போராட்டம் தொடரும். அதுபோல், அந்த கான்கிரீட் சிமெண்ட் தளத்தையும் உடைக்க வேண்டுமென்றார்" கொடகனாறு மீட்புக் குழுவைச் சேர்ந்த மைலாப்பூர் வேளாங்கண்ணி.

 

இது சம்பந்தமாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போதுதான், 110 விதியின்படி குடிமராமத்துப் பணிக்காக 9.45 கோடி ஒதுக்கி நரசிங்கபுரம் ராஜவாய்க்காலுக்கு சிமெண்ட் வாய்க்கால் கட்டப்பட்டது. அப்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஆத்தூர் முன்னாள் சேர்மன் கோபி, ஒன்றியச் செயலாளர் பி.கே.டி.நடராஜன் உட்பட சில ஆளுங்கட்சியினர், அப்போது இருந்த உதவி செயற்பொறியாளர் தங்கவேலை தங்கள் அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். அதன்பேரில்தான், ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, எங்கள் அதிகாரி தங்கவேல் அந்தப் பகுதியில் கான்கிரீட் சிமெண்ட் தளம் போட்டுக்கொடுத்தார். அதனால்தான், தற்பொழுது தொகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கிடையே தண்ணீர் பிரச்சனை மூலம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு முழுப் பொறுப்பு பொதுப் பணித்துறைதான்" என்று கூறினார்.

"எனது தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக கலைஞர் ஆட்சியின்போது பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பதால் பல திட்டங்களைச் செயல்படுத்த ஆளுங்கட்சி தவிர்த்து வருகிறது. இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் சொந்தப் பணத்தில் பல லட்சங்களைச் செலவு செய்து தொகுதி வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். அப்படி இருக்கும்போது என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பொறுக்கமுடியாமல், ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்தச் சிக்கலை ஏற்படுத்திவிட்டனர்.

 

cnc

 

அதைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மூன்று தரப்பு விவசாயிகளை அழைத்துச் சென்று பலமுறை கலெக்டரை சந்தித்து அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு கொடுங்கள் என வலியுறுத்தினேன். அதன்பேரில், குழுவை அமைத்து அந்தக் குழுவும் ஆய்வு செய்து வருகிறது. அப்படி இருக்கும்போது தொகுதி மக்களுக்கு, எள்ளளவுகூட நன்மை செய்யாத பி.ஜே.பி உள்ளிட்ட சில கட்சிகள் வேண்டுமென்றே என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பிரச்சனைக்குரிய தண்ணீரை என் விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தி வருவதாக எனது தொகுதி மக்களை தூண்டி விடுகிறார்கள்.

 

எனக்கு அந்த மூன்று பகுதியிலுமே ஒரு சென்டு நிலங்கூட இல்லை என்பதுதான் உண்மை. அப்படி அந்தத் தண்ணீரை எனது நிலத்திற்குப் பயன்படுத்தி வருவதை, யாராவது ஒருவர் நிரூபித்தாலும், அரசியலை விட்டே விலகத் தயார். இப்படியெல்லாம், அவதூறு பொய்ப் பிரச்சாரத்தைப் பரப்பி எனது தொகுதி மக்களைத் திசைதிருப்பி, அதன்மூலம் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். ஆனால், நான் எப்படிப்பட்டவன் என்று தொகுதி மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்றாகத் தெரியும் என்றார். ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி.

 

I periyasami water issue
                                  திண்டுக்கல் ஆட்சியர் விஜயலெட்சுமி


இது சம்பந்தமாக மாவட்ட கலெட்டர் விஜயலெட்சுமியிடம் கேட்டபோது, "இந்தப் பிரச்சனை சம்பந்தமாக பொதுப்பணித்துறை செயலாளருக்கு தெரியப்படுத்தியதன் பேரில், வல்லுநர் குழுவை அமைத்தனர். அந்தக் குழு ஆய்வு செய்துள்ளது. அதனுடைய அறிக்கை இன்னும் ஒருவாரத்தில் வந்துவிடும். அதன்பிறகு, இப்பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்" என்றார் உறுதியாக.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்சி பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister I.Periyasamy consultation with party officials!

ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவால் ஆத்தூர் தொகுதியில் கிளைக்கழகம் முதல் ஒன்றிய கழகம் வரை உள்ள திமுக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமைச்சரின் உத்தரவுப்படி மகளிர் அணியினர், பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் வீடுவீடாக சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 45 வருடங்களாக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வந்த திமுகவினர் முதல் முறையாக கூட்டணி கட்சி சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்திய கூட்டனியில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டனியில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் ஆர்.சச்சிதானந்தத்தின் வெற்றிக்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பணி ஆற்றிவருகிறார்.

Minister I.Periyasamy consultation with party officials!

அத்தோடு, கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள், தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட அனைவரையும் ஆத்தூர் தொகுதி முழுவதும் திமுக நிர்வாகிகள் பம்பரம்போல் சுழன்று தேர்தல் பணியாற்றி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வைத்துள்ளார்.

இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் உட்பட சில தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள கட்சி பொறுப்பாளர்களிடம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து   சச்சிதானந்தம் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதோடு நமது வெற்றி இந்திய அளவில் பேசப்படுவதாகவும் இருக்க வேண்டும்.  அந்த அளவுக்கு நீங்கள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறி வருகிறார்.

Next Story

பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை; களத்தில் இறங்கிய உ.பி.கள்!!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Minister I. Periyasamy consultation with Theni district party officials

தேனி பாராளுமன்ற தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் அதிமுக சார்பில் தேனி ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, பிஜேபி கூட்டணி கட்சி சார்பில் அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட சில கட்சிகளும் தேர்தல் களத்தில் வளம் வருகிறார்கள்.

தேனி பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளும் மதுரை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பெரியகுளம், கம்பம்‌, ஆண்டிபட்டி, சோழவந்தான் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை ஆளுங்கட்சி கைப்பற்றியுள்ளது. போடி, உசிலம்பட்டி  தொகுதிகளை எதிர்க்கட்சியான அதிமுக வசம் உள்ளது. அதை வைத்து பார்க்கும் போது இத்தொகுதி ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமாக தான் இருந்து வருகிறது. அது போல் கடந்த தேர்தலில் அதிகாரம் பண பலம் இருந்தும் கூட ஓபிஎஸ் மகன் ஓபிஆர் 5,04,813 ஓட்டு தான் வாங்கினார். ஆனால் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கிய இ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிகாரம் பண பலம் இல்லாமல் 4,28,120 லட்சம் ஓட்டு வாங்கி குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் (76693) தோல்வியை தழுவினார்.

Minister I. Periyasamy consultation with Theni district party officials

ஆனால் தற்பொழுது அதிமுக உடைந்திருப்பதால் அந்த ஓட்டுகளும் சிதற வாய்ப்பு உள்ளது. அது போல் டிடிவிக்கும் இலை ஓட்டுகள் விழுக வாய்ப்பு உள்ளது. அதனால் கடந்த முறை வாங்கிய ஓட்டுகள் வாங்கினாலே தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்று விடுவார். அதனால்தான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தேனி பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினோ, இத் தொகுதியை அமைச்சர் ஐ.பெரியசாமி வெற்றி பெற வைத்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது போல் தமிழக அளவில் அதிக ஓட்டுகள்  வாங்க வேண்டும் என்று முதல்வர் தேர்தல் பரப்புரையில் பேசி விட்டு சென்றிருக்கிறார் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

அதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர்  தங்க தமிழ்ச்செல்வனும் தொகுதியில் களமிறங்கி வாக்காள மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அது போல் தொகுதி பொறுப்பாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ. பெரியசாமியும் தொடர்ந்து தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து தொகுதி முழுக்க  ஆய்வு செய்து பொறுப்பில் உள்ள உ.பி.க்களையும் களத்தில் இறக்கி வருகிறார்.

இந்த நிலையில் தான் தேனி மாவட்டத்திற்கு திடீரென நேற்று  முன் தினம் காலை விசிட் அடித்த அமைச்சர் ஐ.பி. பெரியகுளம்  கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் செல்லபாண்டியன்,  சட்டமன்ற உறுப்பினர் சரவண குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் முக்கையா, உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி கடந்த தேர்தலுடன் கூடுதல் ஓட்டுகள் வாங்கி தர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் .

Minister I. Periyasamy consultation with Theni district party officials

அதைத் தொடர்ந்து தேனியில்  நகர பொறுப்பில் உள்ள உ.பி.க்களிடமும் தொகுதி நிலவரத்தை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து போடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் தொகுதி பொறுப்பாளரான மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜெயன் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன்  கட்சி ஆபீஸ்சில் ஆலோசனை செய்து இத்தொகுதியில் அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இருக்கிறார். அதைத்தொடர்ந்து தர்மத்துப்பட்டி,  நரசிங்கபுரம்பாளையத்திலும் ஒன்றிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து கம்பத்தில் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பி. ஆலோசனை செய்தார் அப்போது கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட கூடுதலாக கம்பம் ராமகிருஷ்ணன் வாங்கி தர வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டிக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமியை சட்ட மன்ற உறுப்பினர் மகாராஜன் உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வருமான ஸ்டாலின் சொன்னது போல் இந்த தொகுதியில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வாங்கி நமது வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு எல்லாம் நீங்கள் இரவு பகல் பாராமல் தேர்தல் பணி செய்ய வேண்டும். அப்படி  வேலை பார்த்தால் தான் இத்தொகுதியில் அதிக ஓட்டு வாங்கி வெற்றி பெற முடியும். பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்களை அரவணைத்து தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதோடு கடந்த மூன்று ஆண்டுகளில் தலைவர் செய்த திட்டங்களையும் சலுகைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். குறிப்பாக மாதந்தோறும் பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமைத் தொகையை மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும். அதன் மூலம் மக்களும் நமக்கு வாக்களிப்பார்கள். அதனால் உடனடியாக தேர்தல் களத்தில் இறங்கி தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்று உறுதிபடக் கூறி இருக்கிறார். அதை தொடர்ந்து உ.பி.களும் தேர்தல் காலத்தில் அதிரடியாக இறங்கி  மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.