Skip to main content

“எனக்கு மூன்று முறை அழைப்பு வந்தது..” - சபாநாயகர் அப்பாவு

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

“I got a call three times..” - Speaker Appavu

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, “அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட ஒன்றிய அரசின் நிறுவனங்கள், ஒன்றிய அரசின் மனநிலையை புரிந்துகொண்டு பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர்களை குறிவைத்து அவர்களுக்கு எல்லாம் முதலில் நூல் விடுவது. நூல் விடுவது என்றால், ‘உங்கள் மீது இப்படி எல்லாம் பிரச்சனை இருக்கு. எனக்கு வேண்டிய ஆளு எனக் கூறி, நான் அவ்வாறு அவர்களை சமாதானம் செய்து வைத்திருக்கிறேன். உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என சொல்லி வைத்திருக்கிறேன்’ என ஒவ்வொன்றாக பேசுவதற்கு, அவர்களுக்கு இடைத் தரகர்களாக பல பேரை வைத்துள்ளனர். 

 

குறிப்பா அமலாக்கத்துறையில் இதுபோல் இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு, எதிர்த்தரப்பிடம் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிவிடுவது. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பார்த்து இது நமக்கு தெரியவருகிறது. 

 

இதுபோல், எல்லோருக்கும் முதலில் அன்பாக பேசுவது, பிறகு கொஞ்சம் குரலை உயர்த்தி சிறு மிரட்டல் விடுவது, அதற்கடுத்து சமாதானமாக பேசுவோம் என்பார்கள். இதற்கெல்லாம் பணியவில்லை என்றால் அவருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். இப்படிப்பட்ட செயல்கள்தான் நடப்பதாக பலரும் சொல்கிறார்கள். 

 

என்னிடமும் கடந்த மூன்று மாதங்களாக இதுபோல் மூவர் பேசினார்கள். மூன்றாவது முறை ஒருவர் என்னிடம் பேசும்போது, ‘தம்பி எங்கிட்ட இந்த வேலையெல்லாம் வேண்டாம். நான் சரியாக இருக்கிறேன். மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார். நான் வெறும் விவசாயம் மட்டும்தான் செய்கிறேன். என்னையே இப்படி மிரட்டுகிறீர்கள் என்றால், இதைத்தானே எல்லாருக்கும் செய்வீர்கள்’ என்றேன். எனவே, என் அனுபவப் பூர்வமாக தெரிந்து இதனை சொல்கிறேன்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்