
போரம் சத்தியா. இந்தப் பெயரை நக்கீரன் வாசகர்களால் மறக்க முடியாது. ஆம், 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் குன்றிய தன் தாயோடு, ஒரு மண்குடிசையில் வசித்து வந்தார். படிக்கப் போகவேண்டிய வயதில் வயல் வேலைக்குப் போய்க்கொண்டிருந்த போரம் சத்தியா, இன்று நக்கீரன் வாசகர்களான உங்களால் அவர் ஆசைப்பட்டது போல புது மாடி வீட்டிற்குள் மகிழ்ச்சியோடு அடியெடுத்து வைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சத்தியா. தந்தை இல்லாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயை வைத்துக் கொண்டு 10 அடி நீளம் 7 அடி அகலம் கொண்ட தென்னங்கீற்றுகள் மக்கி, கொட்டிய மழையில் கரைந்த மண்குடிசையில் வசித்துக்கொண்டு தனக்கும் தன் தாயாருக்குமான தேவைகளைப் பூர்த்தி செய்ய வீட்டு வேலை தொடங்கி விடுமுறை நாட்களில் விவசாய கூலி வேலைகள் வரை சென்று தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டார். மழை பெய்தால் படுக்க வசதியில்லை என்பதால் தன் தாயோடு பக்கத்து வீட்டில் இரவில் தூக்கம் பகலில் தோட்ட வேலை. இதனாலேயே +2வில் மதிப்பெண் குறைந்தாலும் மேலும் படிக்கணும் அரசு வேலைக்குப் போகணும்., அதுக்கு முன்னால கதவு வச்ச ஒரு சின்ன வீடு வேணும்; என்ற அவரது ஆசையை ‘மக்கள் பாதை’ மூலம் அறிந்து மாணவி சத்தியாவை சந்தித்து அவரது கோரிக்கைகளையும் வறுமையையும் அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்குக் கொண்டு சென்றோம். அனைத்து உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இவை நக்கீரன் இணையத்தில் செய்தியாகவும், வீடியோவாகவும் கடந்த 2020 செப்டம்பர் 3ந் தேதி வெளிக்கொண்டு வந்தோம்.

செய்தி வெளியான சில மணி நேரத்தில் உதவிகள் செய்ய நக்கீரன் வாசகர்கள் முன்வந்தனர். அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் வருவாய்த் துறையினர் சத்தியா குடியிருக்கும் மண் குடிசைக்குச் சென்று ஆய்வு செய்து மாற்று இடத்தில் குடிமனைப் பட்டாவுக்கான இடம் தேர்வு செய்தனர்.
நக்கீரன் வீடியோவைப் பார்த்து கண்கலங்கிய அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், போரம் கிராமத்திற்கு நேரில் சென்று மாணவிக்கு தைரியம் சொன்னதோடு சில அடிப்படை உதவிகளும் செய்து தொடர்ந்து கல்லூரி படிப்பிற்கும், போட்டித் தேர்வுக்கும் படிக்க உறுதியும் அளித்தார். மேலும் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை வழங்கியதோடு கல்லூரி படிப்பு முடிந்ததும் சென்னையில் உள்ள பிரபலமான வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயில அதற்கான உறுதி கொடுத்தார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மாணவிக்கு ஆலோசனைகள் வழங்கியதோடு அவரது தாயாருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்து வந்து தங்க வைத்து சிகிச்சை அளித்தார்.
இந்த நிலையில் சத்தியாவை தனது அலுவலகத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வீட்டுமனைப்பட்டா வழங்கியதோடு பசுமை வீடும் ஒதுக்கினார். தொடர்ந்து சத்தியாவிடம், உனக்காக நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறி படிக்க அரசு மகளிர் கல்லூரியில் இடம் ஒதுக்கினார். அரசு ஒதுக்கிய நிதியில் பசுமை வீடு கட்டுவது சிரமம் என்ற நிலையில் பெருங்களூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ஜெய்சங்கர் தானாக முன்வந்து சத்தியாவின் வீட்டை நானே கட்டிக் கொடுக்கிறேன் என்றவர் பசுமை வீடு நிதி மற்றும் நக்கீரன் வாசகர்கள் வழங்கிய ரூ.1.5 லட்சம் ரூபாயோடு தன் பங்காக ரூ.2.5 லட்சம் செலவு செய்து ரூ.6 லட்சம் மதிப்பில் 400 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் அழகான வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
வீட்டு வேலைகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் கடந்த 4ந் தேதி ஞாயிற்றுக்கிழமை புதிய வீட்டில் ஆனந்தக் கண்ணீரோடு அடியெடுத்து வைத்திருக்கிறார் சத்தியா. புதுமனை புகுவிழாவிற்கு தனக்கு உதவிய பலரையும் அழைக்க முடியாவிட்டாலும் அவர்களின் வாழ்த்துகளோடு புதுவீட்டிற்குள் சென்றுள்ளார்.
புதிய வீட்டிற்குள் சென்றாலும் இன்னும் பல அடிப்படை வசதிகள் தேவையாகவே உள்ளது. பெரும் மகிழ்வோடு இருந்த மாணவி சத்தியா கூறும்போது, “மக்கள் பாதை மூலம் தகவல் அறிந்து நக்கீரன் என் குடும்ப சூழ்நிலையை வெளிக்கொண்டு வந்தது. அதன்பிறகு எனக்காக வீட்டு மனைப் பட்டா, வீடு, படிக்க சீட், விடுதி, அம்மாவுக்கு சிகிச்சை கிடைத்தது. மேலும் நக்கீரன் செய்தி பார்த்து ஏராளமானவர்கள் என்னிடம் ஆறுதலாக பேசி உதவிகளும் செய்தார்கள். நான் நினைத்தது போல கதவு வைத்த ‘என் கனவு இல்லம்’ கிடைத்துவிட்டது. அடுத்து அரசு அதிகாரியாக வேண்டும். அதற்கான முயற்சிகள் செய்து வருகிறேன். எனக்கு உதவிகள் செய்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் அம்மா உமாமகேஸ்வரி, அப்போதைய எஸ்.பி பாலாஜி சரவணன் அய்யா, மக்கள் பாதை, இன்னும் பெயர் சொல்ல முடியாத முகம் தெரியாத அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்வதோடு நான் விரும்பிய அரசு அதிகாரியாக வருவதே அனைவரின் விருப்பமாக உள்ளது. அதை நிறைவேற்றி என்னைப் போன்றவர்களுக்கு உதவிகள் செய்வேன்” என்றார்.
நக்கீரன் சார்பிலும், ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உதவிகள் செய்த நக்கீரன் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.