புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த 2017- ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15- ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்த நாளில் நெடுவாசலில் விவசாயிகள், மாணவர்கள் தொடங்கி போராட்டம் தொடர்ந்து இரண்டு கட்டமாக 197 நாட்கள் நடந்தது.

Advertisment

நெடுவாசல் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், மாணவர்கள், திரைத்துறையினர் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். போராட்டம் தொடர்ந்ததால் மத்திய, மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்று உறுதி அளித்தனர்.

மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்று அறிவித்தாலும் அடுத்த சில நாட்களில் ஜெம் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் ஜெம் நிறுவனம் போராட்டத்தைப் பார்த்து பயந்தே நெடுவாசல் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை.

hydro carbon projects union government announced delta farmers

Advertisment

மேலும் டெல்டா மாவட்டங்களில் சுமார் 340 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துடன் மத்திய அரசு கையெழுத்திட்டது. இந்த நேரத்திலும் தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கமாட்டோம் என்று அறிவித்தது.

இந்த நிலையில் தான் கடந்த 16 ந் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியும் மக்கள் கருத்துக் கேட்பும் தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு நெடுவாசல் உள்ளிட்ட டெல்டா விவசாயிகளை வேதனைப்படுத்தியுள்ளது.

இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். அதனால் பழைய நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் தான் நெடுவாசல் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட கிராமங்களில் மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம சபை தீர்மானம் நிறைவேற்ற இளைஞர்கள் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய அறிவிப்புகளை ரத்து செய்வதுடன் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் தமிழ்மாறன் தலைமை ஏற்றார். ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார், திமுக நகரச் சயலாளர் சிவக்குமார், செரியலூர் இனாம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மாதவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.தற்போது திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்த தயாராகி வருகின்றனர். மத்திய அரசின் அறிவிப்பால் தமிழ்நாடே போராட்டக் களமாக மாறி வருகிறது.