Skip to main content

கொதிக்கும் சாம்பாரை மனைவி மீது ஊற்றிய கணவன்; குடிபோதையில் வெறிச்செயல்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Husband pours boiling sambar on wife

 

ஓமலூர் அருகே மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிவிட்டு தலைமறைவான கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கருப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் ராகவன் (42). இவருடைய மனைவி நித்யா (37). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ராகவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. சரியாக வேலைக்குச் செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது. மது போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததோடு, அவருடைய நடத்தையிலும் சந்தேகப்பட்டு தாக்கி வந்துள்ளார். 

 

இந்நிலையில், நவ. 22ம் தேதி மாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராகவன், அங்கே சமையல் செய்து கொண்டிருந்த நித்யாவிடம், இன்று என்ன குழம்பு வைத்தாய்? எனக்கேட்டுள்ளார். காய்கறிகள் வாங்க காசில்லாததால் தக்காளி பழத்தை மட்டும் போட்டு சாம்பார் வைத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார். 

 

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ராகவன், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை எடுத்து மனைவி மீது ஊற்றினார். இதில் நித்யாவின் தாடை, மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் நித்யாவை மீட்டு உடனடியாக ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், நித்யா அளித்த புகாரின்பேரில் கொதிக்கும் சாம்பாரை உடல் மீது ஊற்றியது தொடர்பாக ராகவன் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையினருக்கு பயந்து கொண்டு ராகவனும் தலைமறைவானார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.