Skip to main content

உறவைத் துண்டிக்கச் சொன்னார்... புருஷனை கொலை செய்துவிட்டேன்! ஆண் நண்பருடன் சிக்கிய மனைவி திடுக்கிடும் வாக்குமூலம்!!

Published on 16/06/2022 | Edited on 16/06/2022
 

 

husband incident in salem district wife and boy friend arrested police

 

கொளத்தூர் அருகே, ஆண் நண்பருடன் உள்ள தவறான தொடர்பைக் கைவிடும்படி கணவர் அடித்துச் சித்ரவதை செய்ததால் மதுபானத்தில் விஷம் கலந்து குடிக்க வைத்து கொலை செய்து விட்டதாக, கைதான மனைவியும், ஆண் நண்பரும் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே உள்ள காரைக்காட்டைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி புகழரசி (வயது 27). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

 

சக்திவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. ஜூன் 13- ஆம் தேதி இரவு வழக்கம்போல் தூங்கச் சென்ற அவர், மறுநாள் காலையில் எழுந்திருக்கவில்லை. கணவரை நீண்ட நேரம் எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த புகழரசியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர் வீட்டு முன்னர் திரண்டனர். சக்திவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக புகழரசி கூறினார். உறவினர்கள் கதறி அழுதனர். 

 

தற்கொலை விவகாரம் வெளியே கசிந்தால், உடற்கூராய்வு செய்த பிறகே சடலத்தைத் தருவார்கள்; காவல்துறை விசாரணை என்று அலைய வேண்டியிருக்கும் என்று கருதிய உறவுக்காரர்கள், காதும் காதும் வைத்ததுபோல் இறுதிச்சடங்குக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், சக்திவேலின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகக் கருதிய அவருடைய தம்பி முத்துசாமி, இதுகுறித்து கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

 

இந்த புகாரின் பேரில் நிகழ்விடம் விரைந்த கொளத்தூர் காவல்நிலைய காவல்துறையினர், சக்திவேலின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், புகழரசியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு, அவரை சக்திவேல் அடிக்கடி அடித்து உதைத்து வந்ததும், தன் மனைவி அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருடன் தவறான தொடர்பிலிருந்து வந்ததும் தெரிய வந்தது. 

 

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் புகழரசி, அவருடைய ஆண் நண்பர் முத்துக்குமார் இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து கிடுக்கிப்பிடி  விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

 

அவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறை தரப்பில் நம்மிடம் பேசினர். 'புகழரசி, பிற ஆண்களுடன் சிரித்துப் பேசி சகஜமாகப் பழகி வந்துள்ளார். யாரிடமும் சிரித்துப் பேசக்கூடாது என்று மனைவியை சக்திவேல் கண்டித்து வந்துள்ளார். மது போதையில் வீட்டுக்கு வரும் போதெல்லாம், பல ஆண்களுடன் தவறான தொடர்பு வைத்திருக்கிறாய் என்று கூறி, மனைவியை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். 

 

இந்த நிலையில்தான், அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமாருடன் புகழரசிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. தன் கணவரால் ஏற்பட்ட மன உளைச்சலை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால்தான் மனதில் உள்ள பாரம் குறையும் என்று தவித்து வந்த புகழரசிக்கு, முத்துக்குமார் ஆறுதலாக இருந்துள்ளார். இந்த பழக்கம், அவர்களிடையே நெருக்கமான உறவை மலரச் செய்துள்ளது. 

 

மனதால் ஒன்றுபட்டு விட்ட புகழரசியும், முத்துக்குமாரும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் உடலாலும் ஒன்று கலந்தனர். அக்கம்பக்கத்தினர் மூலம் இதைத் தெரிந்து கொண்ட சக்திவேல், மீண்டும் மனைவியைக் கண்டித்துள்ளார். இதையே சொல்லிச் சொல்லி அடிக்கடி மனைவியைத் தாக்கியும் வந்துள்ளார். 

 

ஒரு கட்டத்தில், தாலி கட்டிய கணவனா? ஆறுதலாக இருக்கும் ஆண் நண்பனா? என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்ட புகழரசி, முத்துக்குமாருடன் வாழ்க்கையைத் தொடர்வது என்று முடிவெடுத்தார். தன் எண்ணத்தைச் சொன்னபோது, அதற்கு முத்துக்குமாரும் ஒப்புக்கொண்டார்.  புகழரசியையும், அவருடைய குழந்தைகளையும் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். 

 

அதன்பிறகுதான், சக்திவேலை தீர்த்துக் கட்டி விடலாம் என்று இருவரும் தீர்மானித்தனர். சக்திவேலை எந்த முறையில் கொல்வது என்றெல்லாம் யோசித்துள்ளனர். முதலில், உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொன்று விடலாம் என்று திட்டம் போட்டனர். அதன்படி, ஜூன் 13- ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்த சக்திவேலுக்கு, சாப்பாட்டில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துச் சாப்பிடக் கொடுத்திருக்கிறார் புகழரசி. உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சக்திவேல் வாந்தி எடுத்துவிட்டார். 

 

இந்த திட்டம் தோல்வி அடைந்ததால், கணவருக்குத் தெரியாமல் தண்ணீரிலும், மதுபானத்திலும் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து, குடிக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் சக்திவேலுக்கு வலிப்பு ஏற்பட்டு, மூச்சுப்பேச்சின்றி கிடந்தார். தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் அவர், முத்துக்குமாருக்கு செல்போன் மூலம் 'லைவ் கமென்ட்ரி' போலக் கொடுத்து வந்துள்ளார். 

 

எனினும், கணவர் இறந்து விட்டாரா இல்லையா? என்று அவருக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. அதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்காக, அர்த்த ராத்திரியில் முத்துக்குமாரை தன் வீட்டுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்து, வரவழைத்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது, சக்திவேல் இறந்து விட்டது தெரிய வந்தது. 

 

காலையில் யார் கேட்டாலும், அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து படுத்தவர், மாரடைப்பில் இறந்து விட்டார் என்று சொல்லும்படி, புகழரசிக்கு யோசனை கொடுத்துவிட்டு முத்துக்குமார் இரவோடு இரவாக அங்கிருந்து கிளம்பி விட்டார். அங்கிருந்து செல்லும்போது புகழரசிக்கு தான் வாங்கிக் கொடுத்த செல்போனையும் உஷாராக வாங்கிச் சென்றுவிட்டார். 

 

காவல்துறை விசாரணையின்போது புகழரசியும், முத்துக்குமாரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்து அவர்களே வசமாக மாட்டிக்கொண்டனர்,'' என்கிறார்கள் காவல்துறையினர். 

 

அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் முத்துக்குமாரை, சேலம் மத்தியச் சிறையிலும், புகழரசியை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்