தென்காசி மாவட்டத்தின் குருவிகுளம் அருகிலுள்ள அத்திப்பட்டி கிராமத்தின் கே.கே.நகரைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன் சின்ன முனியசாமி (வயது 36) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கவிதாவிற்கும் (வயது 32) கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு முகேஷ் (வயது 9) என்ற மகன், நவசியா(வயது 6) என்ற மகள் என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
சின்ன முனியசாமி கோவில்பட்டியிலுள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்வதால், வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்பவர். ஆரம்ப காலங்களில் தம்பதியரின் வாழ்க்கை சீராகத்தான் போயிருக்கிறது. மேலும் கவிதா அத்திப்பட்டிப் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு சமூக தணிக்கை ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்திருக்கிறார்.
அத்துடன், மகளிர் சுய உதவிக்குழுத் தலைவியாகவும் இருக்கிறார். கணவன் வெளியூர் வேலை என்பதால், மனைவி கவிதாவோ பணி நிமித்தம் செல்போனில் பேசுவது வழக்கம். அதுசமயம் பணியிடத்திலுள்ள ஒருவரை அடிக்கடி தொடர்பு கொண்டு செல்போனில் அதிக நேரம் பேசுவாராம். அதேபோல், கணவன் சின்ன முனியசாமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பிருப்பது மனைவிக்கு அரசல் புரசலாகத் தெரிய வந்திருக்கிறது.
இதனிடையே நேற்று வேலை முடிந்து சின்ன முனியசாமி ஊருக்கு வந்துபோது மனைவி கவிதா, தன் செல்போனில் யாரிடமோ அதிக நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஏற்கனவே, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமான கவிதா, தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு அதே ஊரிலுள்ள தன் தாய்வீட்டுக்குக் கிளம்பியிருக்கிறார். அப்போது மனைவியைத் தடுத்த சின்ன முனியசாமி, கவிதாவை அடித்துத் கிழே தள்ளி அருகில் கிடந்த கல்லைத் தூக்கி மனைவியின் தலை மீது போட்டிருக்கிறார்.
படுகாயத்தில் தலைநசுங்கிய கவிதாவின் உயிர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பிரிந்திருக்கிறது. மனைவியைக் கொலை செய்த சின்ன முனியசாமி, நேராக குருவிகுளம் காவல்நிலையம் சென்று சரணடைந்திருக்கிறார். அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மேல் விசாரணை நடத்திவருகின்றனர்.